10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்
படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) வெளியானது. தேர்வு எழுதிய மாணவர்களில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு (மார்ச் 2026) கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி கடந்த ஏப்.6-ம் தேதி நிறைவடைந்தது. சுமார் 8.82 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தொடர்ந்து விடைத்தாள் திருத்த பணிகள் தொடங்கி நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று சென்னை - அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
மொத்தம் 8.82 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதியதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். இதில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
வழக்கம்போலவே இந்த முறையும் தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே முன்னிலை வகிக்கின்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 92.15 சதவீதம், மாணவிகளின் எண்ணிக்கை 96.47 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாணவர்களை விட 4.32 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரையில் புதுக்கோட்டை (97.57%), சிவகங்கை (97.54%), தஞ்சாவூர் (97.41%), திருச்சி (97.31%), கன்னியாகுமரி (97.30%) மாவட்டங்கள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.
அரசு பள்ளிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.66 சதவீதம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
பாட வாரியாக தேர்ச்சி விகிதம்:
தமிழ் - 98.43%, ஆங்கிலம் 99.44%, கணிதம் 97.36%, அறிவியல் 98%, சமூக அறிவியல் 97.93%.
நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்கள்:
தமிழ் - 34 , ஆங்கிலம் - 93, கணிதம் 3194, அறிவியல் - 10476, சமூக அறிவியல் - 3336 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.