கோப்புப் படம்
சென்னை: ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு நேற்று தொடங்கியது.
ஐஏஎஸ். ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ். உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. இது முதல்நிலை, மெயின் மற்றும் நேர்முகத்தேர்வு என 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 933 பணியிடங்களை நிரப்பும் வகையில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 4-ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான, முதல்நிலை தேர்வு மே மாதம் 24-ம் தேதி நடத்தப்பட்டு, தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
இதில் தமிழக மாணவர்கள் 651 பேர் உள்பட நாடு முழுவதும் 13,343 பேர் தேர்ச்சி பெற்று மெயின் தேர்வுக்கு தகுதி பெற்றனர். இந்நிலையில், சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டில் சென்னை மட்டும் தேர்வு மையம் ஆகும். எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட 3 மையங்களில் 646 பேர் தேர்வெழுதினர். தேர்வில் 5 மாணவர்கள் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நடைபெற்றது. தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் கடும் சோதனைகளுக்கு பிறகே தேர்வு மையங்களுக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து ஆக.22, 23-ம் தேதிகளிலும், அதன் பிறகு ஆக. 29, 30-ம் தேதிகளிலும் தேர்வு நடைபெறுகிறது.