செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்
சென்னை: இந்தி மூலம் தமிழ் கற்கும் சான்றிதழ் படிப்பு விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் இரா.சந்திரசேகரன் கூறியதாவது: தமிழ் மொழியில் வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் 6-ம் நூற்றாண்டு வரை இருக்கக்கூடிய இலக்கண, இலக்கியங்கள், செப்பேடுகளை ஆராய்ச்சி செய்து அவற்றைப் பல மொழிகளில் வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் மூலமாக திருக்குறள் இதுவரை இந்திய மொழிகளில் 25, வெளிநாட்டு மொழிகளில் 9 என 34 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து வரும் பொங்கல் திருநாளில் 23 இந்திய, 7 வெளிநாட்டு என 30 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்படவுள்ளது. இதில் நீலகிரியில் பேசக்கூடிய இருளா, காட்டு நாயக்கர் உள்ளிட்ட பழங்குடியின மொழிகளும் அடங்கும். அதேபோல், உலகம் முழுவதும் தமிழ் பாரம்பரியத்தை பரப்பும் வகையில் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 100 மொழிகளில் திருக்குறள் வெளியீடு என்ற இலக்கை அடையத் திட்டமிட்டுள்ளோம்.
திருக்குறளின் சைகை மொழி பதிப்பு 45 காணொலிகளாக தயாரிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் வெளியிடப்படும். தொடர்ந்து செம்மொழி நிறுவனத்தின் இணையதளம், யூடியூப் பக்கத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.
இதன்மூலம் தமிழகத்தில் 4 லட்சம் பார்வை மாற்றுத் திறனாளிகள் பயன்பெறுவர். தமிழில் பிரெய்லி முறையில் வடிவமைக்கப்பட்ட 46 செவ்விலக்கியங்களை பிரதமர் நரேந்திர மோடி 2023-ம் ஆண்டு வெளியிட்டார். இது 113 தொகுதிகள், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்டதாகும். இந்த நூல்கள் மூலம் 400-க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.
வாராணசியில் 2022-ல் திருக்குறள் இந்தி மொழியில் வெளியிடப்பட்டது. அதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகியுள்ளன. நமது இலக்கியங்களை இந்தி மொழியில் கொண்டு வரும்போது வட மாநில மக்கள் நமது வரலாறு, பண்பாட்டை புரிந்து கொள்கின்றனர். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் மூலம் அங்குள்ள மாணவர்கள் 15 நாள்களில் இந்தி மூலம் தமிழ் கற்பதற்கான கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தி மூலம் தமிழ் கற்பதற்காக தலா 30 நிமிடம் கொண்ட 90 காணொலிகளையும் உருவாக்கியுள்ளோம்.
இதன் ஒவ்வொரு அத்தியாங்களின் இறுதியிலும் சில வினாக்கள் இடம்பெற்றிருக்கும். சுமார் 4 மாதங்களுக்கும் பிறகு இதற்கான தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் படிப்பு ஓரிரு மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும். இதற்குப் பிறகு மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் மூலமாக தமிழ் கற்பதற்கு இதேபோல் சான்றிதழ் படிப்புகளை அறிமுகப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.