கல்வி

தமிழகத்துக்கான ரூ.5,109 கோடி கல்வி நிதியை வழங்காத மத்திய அரசு

பிஎம் ஸ்ரீ பள்ளி விவகாரமும் பின்புலமும்

சி.பிரதாப்

சென்னை: பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தில் சேராததால் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்துக்கான ரூ.5,109 கோடி நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி வழங்குகிறது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் என்ற விகிதத்தில் இந்த நிதி பங்கீடு அமையும். இந்த நிதியை பெற மத்திய அரசின் விரிவான கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் முழுமையாக பின்பற்ற வேண்டும்.

இதற்கிடையே மும்மொழி கொள்கையில் விலக்கு உட்பட சில கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால் தேசிய கல்விக் கொள்கையின் அம்சமான பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தில் சேருவதற்கு தமிழகம் மறுத்துவிட்டது. இதையடுத்து, தமிழகத்துக்கான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட நிதியை 2024–25-ம் கல்வியாண்டு முதல் மத்திய அரசு நிறுத்திவிட்டது.

ஒட்டுமொத்தமாக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.5,109 கோடி நிதியானது தமிழகத்துக்கு வழங்கப்படாமல் மத்திய அரசு நிலவை வைத்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை சமீபத்தில் வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வித்துறை அலுவலர்கள் சிலர் கூறும்போது, ‘‘மத்திய அரசு 3 ஆண்டுகளாக நமக்கு தரவேண்டிய நிதியை வழங்கவில்லை. இது சார்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தபோது, நீதிபதிகள் உத்தரவின்படி 2024–25 மற்றும் 2025–26-ம் ஆண்டுகளுக்கான ஆர்டிஇ திட்ட நிதி ரூ.714 கோடியை மட்டும் மத்திய அரசு வழங்கியது.

எனினும், பிற திட்டங்களுக்கான நிதி இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதனால் மாநில அரசின் பங்களிப்பு நிதியை கொண்டு தற்போது திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 2024–25, 2025–26-ம் கல்வியாண்டுகளில் மாநில அரசு ரூ.2,014 கோடி செலவிட்டுள்ளது. நடப்பு 2026 –27-ம் கல்வியாண்டில் இடைக்கால நிதியாக, ரூ.647 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நீண்ட காலத்துக்கு மாநில அரசே இந்நிலையை சமாளிக்க முடியாது. ஆசிரியர் பயிற்சிகள், மாணவர்களுக்கான கற்றல் திட்டங்கள் உள்ளிட்ட கல்வி சார்ந்த செயல்பாடுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. புதிய திட்டங்களை உருவாக்க முடியாத சூழல் உள்ளது’’ என்றனர்.

SCROLL FOR NEXT