மொரீஷியஸில் நடந்த உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதனுக்கு 'உலகத் தமிழர் மாமணி' விருது வழங்கிய மொரீஷியஸ் நாட்டின் அதிபர் தரம்பீர் கோகுல்.
வேலூர்: வேலூர் விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதனுக்கு ’உலக தமிழர் மாமணி’ விருதினை மொரீஷியஸ் அதிபர் தரம்பீர் கோகுல் வழங்கினார்.
13-வது உலக தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் உலக பொருளாதார உச்சி மாநாடு, செப்.11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை மொரீஷியஸில் நடைபெற்றது. இதில், 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், அமைச்சர்கள், பொருளாதார வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் சர்வதேச முதலீடுகள், புதிய வணிக தொடர்புகள், செயற்கை நுண்ணறிவு, நிதி சேவைகள், சுகாதாரம், உயர் கல்வி, புத்தொழில்கள், உலகளாவிய வர்த்தகம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் உயர்கல்வி சேவையை பாராட்டி இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வேலூர் விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதனுக்கு, ‘உலகத் தமிழர் மாமணி’என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன், சென்னை வளர்ச்சி கழகத்தின் தலைவரும் உலக தமிழர் பொருளாதார கழகத்தின் தலைவருமான வி.ஆர்.எஸ். சம்பத் உள்பட பலர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். அதேபோல பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய தமிழர்களுக்கு ‘உலகத் தமிழர் மாமணி’ விருது வழங்கப்பட்டது.