சென்னை: அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகள் தொடர்பாக எழுப்பப்பட்ட 2 புகார்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பதவியில் 2,708 காலி இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) கடந்த 2025 டிச.27-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தியது. 42,064 பேர் பங்கேற்றனர். டிஆர்பி இணையதளத்தில் தேர்வு முடிவுகள் ஜூன் 25-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் பல குளறுபடிகள் உள்ளதாக புகார்கள் எழுந்தன. மதிப்பெண் பட்டியலில் ஒரு தேர்வரின் பிறந்த ஆண்டு 2006 என்று இருந்தது. 20 வயது மட்டுமே நிரம்பிய ஒருவர் எப்படி முதுநிலைப் படிப்பை முடித்து, உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வு எழுத முடியும் என்றும் கேள்வி எழுந்தது.
இந்நிலையில், புகார்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக டிஆர்பி தலைவர் எஸ்.ஜெயந்தி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இணையதளத்தில் 56 பாடங்கள் தொடர்பான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் ஒரு தேர்வர் தனது ஆன்லைன் விண்ணப்பத்தில் பிறந்த தேதியை குறிப்பிடும்போது 1991-க்கு பதிலாக 2006 என்று தவறாக பதிவேற்றம் செய்துள்ளார். அவர் குறிப்பிட்ட தேதியுடன் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இன்னொரு தேர்வர் தனது விண்ணப்பத்தில் பெயருக்கு பதிலாக, தவறுதலாக 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் எண்ணை பதிவேற்றம் செய்துள்ளார். கடந்த டிச.22-ம் தேதி தனது பெயரில் திருத்தம் கோரி டிஆர்பிக்கு விண்ணப்பித்தார். அவர் அளித்த விவரம் உறுதி செய்யப்பட்டு, தேர்வு எழுதவும் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் ஏற்கெனவே சமர்ப்பித்த பெயர், விவரங்கள் அடிப்படையிலேயே ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு, தேர்வு மதிப்பெண்ணும் வெளியிடப்பட்டது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.