புதுடெல்லி: அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 10,023 இடங்களை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் மருத்துவர்களின் பற்றாக்குறையை சமாளிக்க, அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 10,023 இடங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எம்பிபிஎஸ் படிப்புக்கு 5,023 இடங்கள் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு 5,000 இடங்கள் ஒதுக்கப்படும். இதன் மூலம் இந்தியாவில் மருத்துவக் கட்டமைப்பு அதிகரிக்கும்.
மத்திய அரசின் 3-ம் கட்ட திட்டத்தின் கீழ் கூடுதல் மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகள் அதிகரிக்கும். இந்த கூடுதல் இடங்கள் 2025 - 2026-ம் ஆண்டு முதல் 2028 - 2029-ம் ஆண்டுக்குள் அமல்படுத்தப்படும். இந்தக் கூடுதல் இடங்களை உருவாக்க ஒவ்வொரு இடத்துக்கும் ரூ.1.50 கோடி செலவிடப்படும். அந்தத் தொகையில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள், கருவிகள் போன்ற மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அதன்படி, திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும்படி மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளோம். இந்தப் புதிய திட்டத்தில் கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்கும் அதேவேளையில், விதிமுறைகள், சீர்திருத்தங்களை தேசிய மருத்துவ ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் மேம்பட்ட மருத்துவக் கல்வி, ஆசிரியர்கள் நியமனம், அவர்களுக்கான தகுதி வரையறை போன்றவை குறித்து விரிவான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் மருத்துவப் படிப்புக்கான இடங்களுக்கு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். தற்போது கூடுதலாக 10,023 இடங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதால், மருத்துவ மாணவர் சேர்க்கையின் போது கணிசமான இடங்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.