கல்வி

சிஎஸ்ஐஆர் 85: கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தை செப்.28-ல் பார்வையிட வாய்ப்பு!

மாணவர்கள், பொதுமக்களுக்கு அனுமதி

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: சிஎஸ்ஐஆர் 85-வது ஆண்டு விழாவையொட்டி சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மைய வளாகத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் வருகிற 28-ம் தேதி (திங்கள்கிழமை) பார்வையிடலாம்.

இது தொடர்பாக சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் என்.ஆனந்தவல்லி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அந்தஸ்துடன் இயங்கி வரும் அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) கடந்த 1942-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி தொடங்கப்பட்டது.

இதன் கீழ் சென்னை சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம், அடையாறு சிஎல்ஆர்ஐ, காரைக்குடி சிக்ரி உள்பட நாடு முழுவதும் 37 ஆய்வகங்கள் உள்ளன.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணிகள் வாயிலாக நாட்டின் வளர்ச்சியிலும் சமூகத்தின் முன்னேற்றத்திலும் சிஎஸ்ஐஆ்ர் பெரும் பங்காற்றி வருகிறது. எங்கள் மையமான எஸ்இஆர்சி கட்டமைப்பு பொறியியல் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை செய்து வருகிறது.

சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் என்.ஆனந்தவல்லி

எங்கள் வளாகத்தில் சிஎஸ்ஐஆர் இதர ஆய்வகங்களின் 6 மண்டல மையங்களும் இயங்கி வருகின்றன. கட்டிட உறுதி சோதனை, பேரிடர் மேலாண்மை, எரிசக்த்தி உள்கட்டமைப்பு, 3-டி அச்சு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த செலவில் கட்டிடங்கள் கட்டுவது, கட்டிட இடிபாடுகளைக் கொண்டு மறுசுழற்சி முறையில் புதிய கட்டிடங்கள் கட்டுவது உள்பட பல்வேறு புதிய தொழில்நுட்ப பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பாக தேசிய நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். தேசிய அறிவியல் தினத்தன்று அரசு பள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக அறிவியல் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கி வருகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் சிஎஸ்ஆர் நிறுவன நாளில் (செப்டம்பர் 26) எங்கள் வளாகத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.

அந்த வகையில் இந்த ஆண்டு 85-வது ஆண்டு விழாவையொட்டி மாணவர்களும், பொதுமக்களும் வருகிற செப்.28-ம் தேதி (திங்கள்கிழமை) தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் எஸ்இஆர்சி வளாகத்தை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையிடலாம். முன் அனுமதி தேவையில்லை.

பார்வையாளர்களுக்கு இங்கு நடைபெறும் பல்வேறு ஆய்வு பணிகளையும், ஆய்வகங்களின் செயல்பாடுகளையும், ஏசிஎஸ்ஐஆர் நிறுவனம் வழங்கும் ஒருங்கிணைந்த எம்.டெக், பிஎச்டி படிப்பு, சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களில் உள்ள ஆராய்ச்சி மற்றும் பணி வாய்ப்புகள் குறித்து எங்கள் அலுவலர்கள் விளக்கிக் கூறுவார்கள். கடந்த ஆண்டு 8,700 மாணவர்கள் எங்கள் வளாகத்தை பார்வையிட்டனர்” என்று ஆனந்தவல்லி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT