வெள்ளிக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் சக மாணவர்களுடன் அமெரிக்க மாணவர் மெல்வின் ராஜ்குமார்.

 
கல்வி

மானாமதுரை அருகே அரசு பள்ளியில் தமிழ் பயிலும் அமெரிக்க மாணவர்!

செய்திப்பிரிவு

மானாமதுரை: மானாமதுரை அருகே விடுமுறைக்கு வந்த அமெரிக்க மாணவர் அரசுப் பள்ளியில் தமிழ் பயில்கிறார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சியைப் பூர்வீகமாக கொண்டவர் செல்வக்குமார்.

இவர் 20 ஆண்டு களுக்கு முன்பு அமெரிக்கா சென்றார். அங்கேயே அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர்.

          

தாய் மொழி மீது பற்று கொண்ட செல்வக்குமார், தனது மகன்களுக்கு மெல்வின் ராஜ்குமார், முருகன், சரவணன், கோபி என பெயர் வைத்துள்ளார். மேலும் வீட்டிலும் தனது மகன்களுக்கு தமிழைக் கற்பித்து வருகிறார். இந்நிலையில், விடுமுறைக் காக செல்வக்குமார் தனது குடும்பத்தினருடன் வெள்ளிக் குறிச்சிக்கு வந்துள்ளார்.

அமெரிக்காவில் 7-ம் வகுப்பு படித்து வரும் மெல்வின் ராஜ்குமார் விளையாட்டு, சுற்றுலா என விடுமுறை நாட்களைக் கழிக்காமல் வெள்ளிக்குறிச்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் பயின்று வருகிறார். அவர் ஒரு மாதமாக நேரம் தவறாமல் தினமும் பள்ளிக்குச் செல்கிறார். இது அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மெல்வின் ராஜ்குமார் கூறுகையில், ‘எனது தந்தையின் தாய் மொழியான தமிழ் மீது எனக்கும் பற்று உள்ளது. அதனால் தமிழ் சொற்களை முறையான உச்சரிப்புடன் கற்றுக்கொள்ள இங்குள்ள பள்ளிக்குச் செல்கிறேன்.

இங்குள்ள மாணவர்கள் மிகவும் நட்பாகப் பழகுகின்றனர். ஆசிரியர்கள் நன்றாகச் சொல்லி கொடுக்கின்றனர். மாணவர்களுடன் பழகும்போது தமிழில் எளிமையாகப் பேச முடிகிறது. அதேபோல் நானும் மற்றவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கிறேன்' என்றார்.

SCROLL FOR NEXT