அப்துல் கலாம் படித்த குரோம்பேட்டை எம்ஐடியில் அவரது உருவ சிலைக்கு பிரமோஸ் ஏவுகணை திட்ட இயக்குநர் டி.கே. கணேஷ் அனவரதம், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் வி. குமரேசன் மரியாதை செலுத்தினர்.
சென்னை: விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் ஏராளமான தொழில்முனைவு வாய்ப்புகள் இருப்பதாக பிரமோஸ் ஏவுகணை திட்ட இயக்குநர் டி.கே.கணேஷ் அனவரதம் தெரிவித்தார்.
அப்துல் கலாமின் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான குரோம்பேட்டை எம்.ஐ.டி. வளாகத்தில் உள்ள விண்வெளி பொறியியல் துறை சார்பில் இளைஞர் எழுச்சி நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த கல்லூரியில்தான் அப்துல் கலாம் விண்வெளி தொழில்நுட்பத்தில் பிடெக் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரம்மோஸ் ஏவுகணை திட்டத்தின் இயக்குநர் டி.கே. கணேஷ் அனவரதம் பேசும்போது, "விண்வெளி, பாதுகாப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பத் துறைகளில் மாணவர்களுக்கு ஏராளமான தொழில்முனைவு வாய்ப்புகள் உள்ளன.
மாணவர்கள் தங்களது புதிய சிந்தனைகளையும் தொழில்நுட்ப அறிவையும் பயன்படுத்தி புத்தாக்கத் தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்க வேண்டும். புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்க முன்வர வேண்டும்" என்றார்.
அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் வி. குமரேசன் பேசும்போது, "வளர்ந்து வரும் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பத் துறைகளில் சிறந்து விளங்குவதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு, ஆராய்ச்சித் திறன் மற்றும் புத்தாக்கச் சிந்தனைகளை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் பேராசிரியர் பி.டி.என். ஸ்ரீதர், இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கலாம் ஆற்றிய பணிகளை எடுத்துரைத்தார்.
விழாவின் முக்கிய அம்சமாக, பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையின் அரை அளவிலான மாதிரியை பிரம்மோஸ் ஏவுகணை திட்டத்தின் இயக்குநர் டி.கே.கணேஷ் திறந்து வைத்தார். முன்னதாக, விண்வெளி பொறியியல் துறைத் தலைவர் சி. செந்தில்குமார் வரவேற்றுப் பேசினார்.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.