திருப்பத்தூர்: வீடு தேடிச் செல்லும் நடமாடும் நூலகம் மூலம் அடித்தட்டு மக்களிடையே வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் ஆம்பூர் அரசுப் பள்ளி ஆசிரியருக்குப் பாராட்டுக்கள் குவிகின்றன.
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அடுத்த பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் சரவணன் தான் கற்ற கல்வி அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், சமூக அக்கறையுடன் நடமாடும் நூலகம் ('நடமாடும் நூலகம் – வாசியுங்கள் - கற்றுக்கொள்ளுங்கள் -வளருங்கள்') என்ற புதுமையான முயற்சியை முன்னெடுத்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, ஆம்பூர் அருகே உள்ள நரிக்குறவர் பகுதியில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் வாசிப்புத் திறன், மொழி திறன் மற்றும் சிந்தனைத் திறனை மேம்படுத்தும் நோக்கில், இரு சக்கர வாகனத்தில் சிறிய அளவிலான நடமாடும் நூலகத்தை உருவாக்கி, நேரடியாக அவர்களது குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்களும் வாசிப்பை நேசிக்க வேண்டும் என்ற நோக்கில் செயலாற்றி வருகிறார்.
இந்த நடமாடும் நூலகத்தில் சிறுவர் சிறுகதை புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு நூல்கள், அறிவியல் நூல்கள், பொது அறிவு நூல்கள், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள், குழந்தைகளுக்கான சிறுகதைகள், நீதிக் கதைகள் உட்பட பல்வேறு வாசிப்பு புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் மாணவர்கள் தங்களது விருப்பத்துக்கேற்ப புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கவும், குறிப்பிட்ட காலத்துக்கு தங்களது வீட்டுக்கு எடுத்துச் சென்று குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து படிக்கவும் வாய்ப்பையும் ஆசிரியர் சரவணன் ஏற்படுத்தித் தருகிறார்.
இது மட்டுமின்றி தினசரி தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை மாணவர்கள் சத்தமாக வாசிக்கும் ‘செய்தி வாசிப்பு', சிறுகதைகளைப் படித்து அதன் கருத்துகளைப் பகிரும் ‘கதை பகிர்வு', புதிய சொற்களை அறியும் ‘சொல்வளம் வளர்ப்பு', வாசித்த நூலின் சாராம்சத்தை விளக்கும் ‘புத்தக உரையாடல்', பெற்றோர்களுடன் இணைந்து குடும்ப வாசிப்பு போன்ற செயல்பாடுகளும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. கல்வியில் பின்தங்கும் அபாயம் உள்ள சமூகங்களை நேரடியாகச் சென்றடைந்து, ‘ஒவ்வொரு வீட்டிலும் ஒரு புத்தகம் – ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு வாசிப்பாளர்' என்ற இலக்கை நோக்கி இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
குறிப்பாக, பள்ளி நேரத்துக்கு வெளியிலும் மாணவர்கள் புத்தகங்களுடன் தொடர்பில் இருக்கவும், கைப்பேசி பயன்பாட்டிலிருந்து வாசிப்பு பழக்கத்துக்கு அவர்களை ஈர்க்கவும் இந்த நடமாடும் நூலகம் பெரிதும் உதவியாக இருப்பதாகவும், இந்த புதிய முயற்சியின் மூலம் நரிக்குறவர் பகுதியில் வசிக்கும் மாணவர்களிடையே வாசிப்பின் மீதான ஆர்வம், புதிய சொற்களைக் கற்றுக்கொள்ளும் திறன், தன்னம்பிக்கையுடன் பேசும் திறன், நாளிதழ் வாசிக்கும் பழக்கம் மற்றும் சமூக விழிப்புணர்வு குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து வருவதாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக ஆசிரியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்தும் சமத்துவமான கல்வி, சமூகப் பங்கேற்பு மற்றும் அடிப்படை வாசிப்புத் திறன் (எப்எல்என்) ஆகிய இலக்குகளை நடைமுறைப்படுத்தும் சிறந்த முன்மாதிரியாக இந்த மொபைல் நூலக திட்டம் திகழ்வதாக ஆசிரியர் சரவணன் தெரிவித்துள்ளார். இவரது, இந்த புதிய முயற்சிக்குப் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.