கல்வி

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாத நேதாஜி விளையாட்டு மைதானம்

செய்திப்பிரிவு

உடுமலை: உடுமலை நேதாஜி மைதானத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை- தளி சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு சொந்தமான நேதாஜி மைதானம் மத்திய பேருந்து நிலையம் அருகே தனியாக உள்ளது. அங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் நடைபயிற்சியிலும், நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்வேறு விளையாட்டுப் பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இம்மைதானத்தில் தனியார் அமைப்பு சார்பில், கடந்த சில நாட்களாக தென் மாநிலங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளை காண வரும் பார்வையாளர்கள் அமர்வதற்காக மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது. உடுமலை சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது வீசிய சூறைக்காற்றால் மேற்கூரைகள் காற்றில் பறந்தன.

அப்போது மழைக்காக அங்கு ஒதுங்கியிருந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், அங்கிருந்து ஓடியதால் காயமின்றி தப்பினர். நேற்று முன்தினம் நடைபெறவிருந்த போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், நேதாஜி மைதானத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதிப்பட்டு வருவதாக விளையாட்டு வீரர்களும், மாணவர்களும் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘உடுமலையில் உள்ள நேதாஜி மைதானம் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்ள உதவியாக உள்ளது. ஆனால் மழைக் காலங்களில் இம்மைதானத்தில் பாதுகாப்பாக ஒதுங்கக்கூட இடமில்லை.

கழிவறை, குடிநீர், ஓய்வறை, மழை நீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இம்மைதானத்தில் மேற்கொள்ள வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியின்போது இம்மைதானத்தில் உள் விளையாட்டரங்கம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளும், அமைச்சர்களும் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

தென்னை மரங்கள் சாய்ந்தன: மடத்துக்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட மைவாடி, ஜோத்தம்பட்டி, வேடப்பட்டி, செங்கண்டிபுதூர், போத்தநாயக்கனூர், பாப்பான்குளம், கண்ணாடிபுத்தூர், நீலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 200-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

5 இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன. விவசாயப் பயன்பாட்டுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் மீது மரம் விழுந்ததில் டிராக்டர் சேதமடைந்தது. அதே பகுதியில் தோட்டத்தில் இருந்த மாட்டின் மீது மரம் விழுந்ததில் அதன் கால்கள் முறிந்தன.

SCROLL FOR NEXT