சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை நேற்று 2 லட்சத்தைத் தாண்டியது.
தமிழகத்தில் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்டவை அடங்கும்.
இவற்றில் வழங்கப்படும் பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் 1.50 லட்சமாகும். இந்த இடங்கள் பொதுக் கலந்தாய்வு மூலம், ஒற்றைச்சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) நிரப்பப்படுகின்றன.
அந்த வகையில், இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 5-ம் தேதி தொடங்கியது. மாணவ, மாணவிகள் போட்டிப் போட்டுக் கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர். 25-வது நாளான நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, 2 லட்சத்து 4 ஆயிரத்து 62 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 379 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 301 பேர் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்திருப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் புருஷோத்தமன் தெரிவித்தார்.
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு ஜுன் 4-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவுசெய்ய வேண்டும்.