சென்னை: இளநிலை கலை, அறிவியல் படிப்புகளில் சேர இதுவரை இல்லாத அளவுக்கு 1.20 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகச் சென்னை மாநிலக் கல்லூரியின் முதல்வர் ராமன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒருலட்சத்து 7,299 இடங்கள் உள்ளன.இதன் சேர்க்கைக்கு மாநிலம் முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 44,104 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் நேற்று முன்தினம் வெளியிட்டது.
இது தொடர்பாக நமது `இந்து தமிழ் திசை' நாளிதழில் நேற்று (மே 26) செய்தி வெளியாகியிருந்தது. அதில், ``சென்னை மாநிலக் கல்லூரியில் மொத்தமுள்ள 1,140 இடங்களுக்கு 40,030 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சென்ற ஆண்டு இந்த கல்லூரியில் 95,000 பேர் வரை விண்ணப்பித்த நிலையில், நடப்பாண்டில் அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் இரா.இராமன் அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டு ஒரு லட்சத்து 20,304 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதன்படி கடந்த ஆண்டைவிடக் கூடுதலாக 25,000 விண்ணப்பங்கள் மாநிலக் கல்லூரிக்கு வரப்பெற்றுள்ளன. அதாவது, ஓரிடத்துக்குச் சராசரியாக 106 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.
நடப்பாண்டில் மாநிலக் கல்லூரியில் 40,030 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 2022-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 37,839 ஆக இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.