கல்வி

10, 11-ம் வகுப்புக்கான துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 10, 11-ம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் (மே 27) நிறைவு பெறுகிறது.

தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூன் 27 முதல் ஜூலை 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. எனவே, பள்ளி மாணவர்கள் அவரவர் படித்த பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

தனித்தேர்வர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைந்துள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இதில் விண்ணப்பிக்க தவறியவர்கள் மே 30, 31-ம் தேதிகளில் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். அதற்கு தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ரூ.500, பிளஸ் 1 மாணவர்கள் ரூ.1,000 செலுத்த வேண்டும்.

அதேபோல, 10, 11-ம்வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் அவகாசமும் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

எனவே, பள்ளி மாணவர்கள் படித்த பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதியமையங்கள் மூலமும் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கான கட்டணம், துணைத் தேர்வுக்கான விரிவான அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

SCROLL FOR NEXT