திருப்பூர்: “10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நானும் மதிப்பெண் குறைவுதான்” என பல்லடத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியராக தா.கிறிஸ்துராஜ் கடந்த 22-ம் தேதி பொறுப்பேற்றார். இந்நிலையில், இவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, சிறப்பு சிகிச்சை பிரிவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடமும் சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறதா? மருத்துவர்கள், செவிலியர்கள் நோயாளிகளை எவ்வாறு கவனிக்கிறார்களா என நேரில் கேட்டறிந்தார்.
அப்போது அங்கு ஒரு சிறுவன், சிகிச்சை பெறுவதை மாவட்ட ஆட்சியர் பார்த்தார். தொடர்ந்து அந்தச் சிறுவனிடம் பேசினார். அப்போது அந்த ச்சிறுவன், பல்லடம் கரடிவாவி பகுதியைச் சேர்ந்தவர் என்பவதும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். அந்த மாணவரிடம், ''நானும் மதிப்பெண் குறைவுதான். அதன்பின்னர் படித்துதான் மாவட்ட ஆட்சியர் ஆனேன். வரும் ஆண்டுகளில், இன்னும் நன்றாக படித்து பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும். தேர்வு முடிவுகள் வந்ததும் என்னை தொடர்புகொண்டு மதிப்பெண்ணை தெரிவிக்க வேண்டும்'' என்றார்.
தொடர்ந்து மாணவரிடம் பேசிய ஆட்சியர், ''உனக்கு பிடித்த விளையாட்டு எது?” என்று கேட்டார். அப்போது அந்தச் சிறுவன் ''வாலிபால்'' என்றார். நான் ''வாலிபால் விளையாட்டு வீரர் தான்'' என்றார். மேலும் ''தற்கொலை எண்ணம் எப்போதும் மனதில் ஏற்படக்கூடாது'' என அந்தச் சிறுவனுக்கு ஆறுதல் சொல்லி நம்பிக்கை தந்தார். இந்த உரையாடல், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.