கல்வி

பெரியார் பல்கலை. ஆராய்ச்சி மையத்தில் முதுகலை பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை: இணைய வழியில் விண்ணப்பிக்க அழைப்பு

செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரி பெரியார் பல்கலைக் கழக பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மையத்தில் முதுகலை பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெரியார் பல்கலைக் கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர்(பொ) முனைவர் மோகனசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தருமபுரி அடுத்த பைசுஅள்ளி பெரியார் பல்கலைக் கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள எம்.ஏ., ஆங்கிலம், எம்.பி.ஏ., எம்.எஸ்சி. கணிதம், எம்.எஸ்சி. இயற்பியல், எம்.எஸ்சி. கணினி அறிவியல், எம்.எஸ்சி. பயோ டெக்னாலஜி, எம்.எஸ்சி. அப்ளைடு ஜியாலஜி ஆகிய முதுகலை மற்றும் மூதறிவியல் பாடப்பிரிவுகளில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. www.periyaruniversity.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் ரூ.354 வீதம் விண்ணப்பக் கட்டணமாக இணையதளத்திலேயே செலுத்தப்பட வேண்டும். பட்டியலின, பழங்குடியின மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களின் 5 பருவ மதிப்பெண் சான்றிதழ்களையும், தேவையான இதர சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். வரும் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும். கூடுதல் விவரம் அறிய விரும்புவோர் 94897 90205 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT