சென்னை: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இந்தாண்டு 1.70 லட்சம் மாணவர்களைச் சேர்க்க மாநகராட்சி இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறது.
சென்னை மாநகராட்சியில், புதிதாக இணைக்கப்பட்ட 139 பள்ளிகள் உட்பட 420 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 1.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது, மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அதில், 1.70 லட்சம் மாணவர்களை சேர்க்கும்படி மாநகராட்சி இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், "சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்களுக்கு மேல் படிக்கும் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளிகளிலும், சுகாதாரமான குடிநீர், கழிப்பறை மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நிகரான மேஜைகள் ஆகியவை உள்ளன.மேலும், சிட்டிஸ் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் வாயிலாகவும் பல்வேறு பள்ளிகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் விரைவில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. அதேபோல், விளையாட்டு உபகரணங்கள் போன்ற வசதிகளும் உள்ளன. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிவாரியாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பொது தேர்வில் 85 சதவீத்துக்கு மேல் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இதற்காக, ஆங்கில மொழிக் கல்வி மற்றும் இதர பாடத்திட்டத்துக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இவை குறித்து, பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், பள்ளி நுழைவு வாயில்களில் விளம்பர பலகை வைக்க அறிவுறுத்தி உள்ளோம். அதேபோல், பள்ளி வாரியாக உள்ள உட்கட்டமைப்பு குறித்து துண்டு பிரசுரம் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டடங்கள், முன்னாள் மாணவர்கள் வாயிலாகவும் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. எனவே, 1.70 லட்சம் மாணவர்களை பள்ளிகளில் சேருவர் என எதிர்பார்கிறோம்” என்று அவர்கள் கூறினர்.