லக்னோ: ரயில் விபத்து ஒன்றில் இரு கால்களையும், ஒரு கையையும் இழந்தாலும், மனம் தளர்ந்து விடாமல் தனது விடாமுயற்சியால் போராடி சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் சுராஜ் திவாரி.
ஐஏஎஸ்., ஐபிஎஸ்., ஐஎப்எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்துகிறது. முதல்நிலை, இரண்டாம் நிலை தேர்வுகள், நேர்காணல் என 3 கட்டங்களாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்தாண்டு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் யுபிஎஸ்சி இணையதளத்தில் கடந்த 23ஆம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தம் 933 பேரை தேர்வு செய்து பல்வேறு பணிகளுக்கு யுபிஎஸ்சி பரிந்துரைத்துள்ளது. இவர்களில் 613 பேர் ஆண்கள், 320 பேர் பெண்கள்.
இதில் உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த சுராஜ் திவாரி என்ற இளைஞர் 917-வது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். அவருடைய பின்னணியும் அவர் கடந்து வந்த பாதையும் சுராஜை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டுகிறது.
மெயின்பூர் மாவட்டத்தின், கஸ்வா குரவ்லி பகுதியில் வசிக்கும் சுராஜ் திவாரிக்கும் இரு கால்களும், ஒரு கையும் கிடையாது. மற்றொரு கையில் மூன்று விரல்கள் இல்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு ரயில் விபத்து சுராஜை படுக்கையில் வீழ்த்தியது. டெல்லியில் ஒரு கல்லூரியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த அவரது எதிர்காலம் குறித்த கனவு சுக்குநூறாக நொறுங்கிப் போனது.
கால்களையும், கையையும் இழந்த சுராஜ் திவாரி முழுக்க முழுக்க குடும்பத்தினரையே சார்ந்திருக்க வேண்டிய நிலை. விபத்து நடந்த சில நாட்களிலேயே அவரது சகோதரரும் இறந்து போனார். குடும்பத்தின் வறுமை சூழலை டெய்லரான சுராஜின் தந்தையால் சமாளிக்க முடியவில்லை. குடும்பச் சூழல் சுராஜை கடும் மன அழுத்தத்தில் ஆழ்த்தியது.
இந்த இழப்புகளால் மனம் தளராத சுராஜ் தன்னை சிறிது சிறிதாக மன அழுத்தத்திலிருந்து மீட்டுக் கொண்டு, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ரஷ்ய இலக்கியத்தில் இளநிலை முடித்து அங்கேயே முதுநிலை படிப்பிலும் சேர்ந்தார். புதிதாக துளிர்த்த அந்த நம்பிக்கையை இன்னும் சுடர்விட்டெரியச் செய்யும் பொருட்டு யுபிஎஸ்சி தேர்வுக்கும் தயாரானார் சுராஜ். ஒருநாளைக்கு 18 முதல் 20 மணி நேரம் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு படித்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் சுராஜ்.
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், சுராஜ் எந்தவொரு கோச்சிங் சென்டருக்கும் சென்று பயிற்சி பெறவில்லை. ஃபீஸ் கட்ட போதிய பணம் இல்லாததால் இணையத்தின் உதவியுடன் படித்துள்ளார். கரோனா வைரஸ் பரவல் நாட்டையே முடக்கிய போது சுராஜ் சிவில் சர்வீஸ் தேர்வு தயாராகி வந்துள்ளார்.
சுராஜின் தேர்ச்சி அடைந்த செய்தியை அவரது குடும்பம் மட்டுமின்றி அவரது ஊரே கொண்டாடி வருகிறது. தன் மகனின் வெற்றி குறித்து சுராஜின் தந்தை ராஜேஷ் திவாரி பேசுகையில், ‘என் மகனின் கை கால்களை பறித்த அந்த விபத்துக்குப் பிறகு எங்கள் குடும்பத்துக்கு எதிர்காலமே இனி இல்லை என்று நினைத்தேன். அப்போது சுராஜ் என்னிடம், “என் கையில் மூன்று விரல்கள் இருக்கிறது அப்பா. இதில் ஒரு விரல் இருந்திருந்தால் கூட உங்களை நான் கைவிட மாட்டேன்” என்று கூறினான். அவன் சொன்னபடியே இப்போது செய்து காட்டிவிட்டான்” என்று கண்ணீருடன் கூறுகிறார்.
உடலின் முக்கிய பாகங்களை விபத்தில் இழந்திருந்தாலும் மனிதனுக்கு மிகவும் தேவையான தன்னம்பிக்கையை இழக்காத காரணத்தால் இன்று நாட்டையே தன்னை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் சுராஜ் திவாரி.