பல்லாவரத்தில் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கைக்காக அலைமோதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள். 
கல்வி

தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவர் சேர்க்கை விறுவிறுப்பு: பல்லாவரம் அரசு பள்ளிக்கு படையெடுக்கும் பெற்றோர்

செய்திப்பிரிவு

பல்லாவரம்: பல்லாவரம் அரசு மறைமலை அடிகள் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கைக்கு தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில் பெற்றோர், மாணவர்கள் கூட்டம் அலைமோதியது. பல்லாவரத்தில் அரசு மறைமலை அடிகள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.இந்தப் பள்ளியில் 6-ம் வகுப்புமுதல் பிளஸ் 2 வரை வகுப்புவரை மாணவிகள் பயில்கின்றனர்.

ஆண்டுதோறும் 10, பிளஸ் 1,பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகளில் இந்தப் பள்ளி மாணவிகள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பல்வேறு தேர்வுகள், விளையாட்டு போட்டிகள், திறனாய்வு போட்டிகள் சிறந்து விளங்குகின்றனர். இதனால், ஆண்டுதோறும் மாணவிகள் சேர்க்கைக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. ஒன்று முதல் 9-ம் வகுப்புமாணவர் சேர்க்கை நடைபெறுவதால் அங்கு மாணவர்கள் பெற்றோர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில் பல்லாவரத்தில் அமைந்துள்ள மறைமலை அடிகள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வாங்க பெற்றோர்கள் குவிந்து வருகின்றனர்.

பள்ளியின் கல்வித்தரம் மற்றும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் போக்குவரத்து வசதி அரசின் சலுகைகளும் கிடைப்பதால் இப்பள்ளியில் சேர்க்கபெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ரவி காசி வெங்கட்ராமன் கூறியதாவது: 2022-23 ம் கல்வி ஆண்டில் மறைமலை அடிகள் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் உள்கட்ட அமைப்புக்கள் புனரமைக்கப்பட்டு மாணவர்கள் கல்வி கற்கும்சூழல் மேம்படுத்தபட்டதாலும், ஆசிரியர்களின் ஆதரவுடன் மாணவர்கள் பல்வேறு துறைகளில் பெற்ற வெற்றிகளாலும் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அனைவரின் கவனத்தையும் பள்ளி ஈர்த்துள்ளது.

மேலும் 2022-23 ம் ஆண்டின்பொதுத்தேர்வில் 10-ம் வகுப்புபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளின்தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளதால் பெற்றோரின் நன்மதிப்பை பெற்றுள்ளது. இதன்காரணமாக பிளஸ் 1 சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பெறுவதற்காக மாணவர் கூட்டம் தனியார் பள்ளிக்கு நிகராக பள்ளியில் அலைமோதுகிறது. இதுவரை 200 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் தேவை என பலர் கேட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT