சென்னை: எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் கணித பாடத்தில் 3,649 மாணவ, மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழில் யாரும் சென்டம் எடுக்கவில்லை.
தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் அரசுப் பள்ளிகள் 87.45 சதவீதமும், தனியார் சுயநிதி பள்ளிகள் 97.38 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகள் - 92.24, இரு பாலர் பள்ளிகள் - 94.38, பெண்கள் பள்ளிகள் - 94.38, ஆண்கள் பள்ளிகள் - 83.25 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.
தனியார் பள்ளிகள் பின்னடைவு: இந்த ஆண்டு எஸ்எல்எல்சி தேர்வில் மொத்தம் 3,718 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இது கடந்த ஆண்டைவிட (4,006) குறைவாகும். கடந்த ஆண்டு 3,120 தனியார் பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 2,689 ஆக குறைந்துள்ளது. அதேநேரம், நூறு சதவீத தேர்ச்சியில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,026 (கடந்தஆண்டு 886) ஆக உயர்ந்துள்ளது.
ஃப்ளூ பிரின்ட் முறை நீக்கம் உட்பட தேர்வு முறை மாற்றங்களால் தனியார் பள்ளிகள் தேர்ச்சியில் தொடர் பின்னடைவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாடங்களில் சென்டம்: கணிதத்தில் 3,649 பேர் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். அதேபோல, ஆங்கிலத்தில் 89 பேரும், அறிவியலில் 3,584 பேரும், சமூக அறிவியலில் 320 பேரும் சென்டம் எடுத்துள்ளனர்.
இந்த ஆண்டு தமிழில் யாரும் முழு மதிப்பெண் பெறவில்லை. கடந்த ஆண்டு அறிவியலில் 3,841, கணிதத்தில் 2,186, சமூக அறிவியலில் 1,009, ஆங்கிலத்தில் 45 பேர் சென்டம் எடுத்திருந்தனர். தமிழில் ஒருவர் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்திருந்தார். இந்த ஆண்டு சென்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் அறிவியல் மற்றும் சமூக அறிவியலில் பாடத்தில் குறைந்திருக்கிறது.
ஒட்டுமொத்தமாக ஆங்கில பாடத்தில் 95.55 சதவீதம் பேரும்மொழிப்பாடத்தில் 95.55, கணிதத்தில் 95.54, அறிவியலில் 95.75, சமூக அறிவியலில் 95.83 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசுத் துறை பள்ளிகளை பொறுத்தவரை, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் 92.55 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள் - 83.99, மாநகராட்சி பள்ளிகள் - 82.62, வனத்துறை பள்ளிகள் - 91.23, நகராட்சிபள்ளிகள் - 87.67, சமூக நலத்துறை பள்ளிகள் - 91.53, பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் - 86.12 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
வட மாவட்டங்கள் சுமார்: தேர்ச்சி பட்டியலில் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட வட மற்றும் கடலோர மாவட்டங்கள் இந்த ஆண்டும் பின்னடைவை சந்தித்துள்ளன. அரசுப் பள்ளிகள் தேர்ச்சியில் மேற்கண்ட மாவட்டங்களுடன் தேனி, காஞ்சிபுரம், ஊட்டி, திருவள்ளூர் பகுதிகளும் சேர்ந்து பின்தங்கியுள்ளன.
தலைநகரான சென்னை மாவட்டம் 89.14 சதவீத தேர்ச்சியுடன் 29-வது இடத்தில் பின்தங்கியுள்ளது.
உயர்கல்வி ஆலோசனை: குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், தோல்வி பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் தயக்கமின்றி அரசின் இலவச உதவி மையத்தை 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும். அதேபோல, தேர்ச்சி பெற்றவர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை பள்ளிக்கல்வியின் 14417 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம்.