புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் 87.18 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 55 அரசுப் பள்ளிகளில் ஓர் அரசு பள்ளி கூட நூறு சதவீத தேர்ச்சி பெறவில்லை.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இது தொடர்பாக புதுச்சேரி பள்ளி கல்வித் துறை வெளியிட்ட தகவலில், "புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 155 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 6,726 மாணவர்களும், 7,529 மாணவிகளும் என மொத்தம் 14,255 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் - 5,541, மாணவிகள் - 6,887 என மொத்தம் 12,428 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 87.18 சதவீதமாகும். இதில் அரசு பள்ளி மாணவர்கள் 75.73 சதவீதமும், தனியார் பள்ளி மாணவர்கள் 96.18 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை காட்டியிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 3.72 சதவீதம் குறைந்துள்ளது.
புதுச்சேரியில் 22 தனியார் பள்ளிகள், காரைக்காலில் 2 தனியார் பள்ளிகள் என 28 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இந்தாண்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 55 அரசு பள்ளிகளில் ஓர் அரசு பள்ளி கூட நூறு சதவீத தேர்ச்சி பெறவில்லை.
மேலும், தமிழ் - 1, பிரெஞ்சு - 32, இயற்பியல் - 12, வேதியியல் - 2, உயிரியல் - 5, கணிப்பொறி அறிவியல் - 34, தாவரவியல் - 1, விலங்கியல் - 1, பொருளியல் - 2, வணிகவியல் - 14, கணக்கு பதிவியல் - 37, வணிக கணிதம் - 1, கணிப்பொறி பயன்பாடு - 43 என மொத்தம் 185 பேர் நூறுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.