கல்வி

மதுரை | கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க ஏற்பாடு

என். சன்னாசி

மதுரை: மதுரை கல்லூரிக் கல்வி இணை இயக்குநரகத்தின் கீழ் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 40 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 150க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்லூரிகளும் செயல்படுகின்றன.

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இன சுழற்சி ஒதுக்கீடு அடிப்படையில் ஒவ்வொரு கலை பாடப் பிரிவில் சுமார் 50-60 பேரும், அறிவியல் பிரிவில் 40-50 மாணவ, மாணவிகளும் சேர்க்கப்படுகின்றனர்.

இந்நிலையில், பிளஸ்2 தேர்வு மே 8-ம் தேதி வெளியான நிலையில், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கின்றனர். பெரும்பாலான அரசு உதவி பெறும், தனியார் கல்லூரகளில் பிளஸ்-2 தேர்வு முடிவுக்கு முன்பாக ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஒரு சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஒருசில அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும், அரசு கல்லூரிகளிலும் 9-ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம் பெறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளை போன்று இவ்வாண்டும் வழக்கம் போன்று பிகாம், ஆங்கிலம், வேதியியல் போன்ற முக்கிய கலை பாடப்பிரிவுகளில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டி விண்ணப்பித்து வருகின்றனர்.

பேராசிரியர்கள் சிலர் கூறியது, "பொதுவாகவே பொறியியல் மோகம் குறைந்து கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் ஆர்வம் மாணவர்கள்,பெற்றோர் மத்தியில் அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக பிகாம்(பொது), பிகாம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், ஆங்கிலம், தமிழ் இலக்கியம், வேதியியல், பிஎஸ்சி ஐடி போன்ற முக்கிய பாடப்பிரிவுகளில் விரும்பி சேர விண்ணப்பிக்கின்றனர். பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் மதிய சுழற்சியில் (ஷிப்ட்-2) கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களுக்கு அனுமதி பெறுவர். தற்போது, சில கல்லூரிகளில் வேதியியல் பாடத்திற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு இருப்பதால் இப்பாடத்திற்கான தேவை அதிகரித்துள்ளது.

தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம்,பிஎஸ்சி கணிதம் உள்ளிட்ட கலை பிரிவை முடித்து, அதன் மூலம் டிஎன்பிஎஸ் குரூப்-1 போன்ற அரசு போட்டித் தேர்வுகளை எழுதும் நோக்கில் சேருகின்றனர். ஒவ்வொரு பாடத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை விட ,கூடுதலாக 2 அல்லது 3 மடங்கு விண்ணப்பங்கள் வருகின்றன. அரசு கல்லூரிகளில் சேர விண்ணபிக்கும் மாணவ, மாணவிகளுக்கென அந்தந்த கல்லூரியில் உதவி மையம் செயல்படு கிறது. இதன்மூலம் விண்ணப்பிக்கலாம்" என்றனர்.

SCROLL FOR NEXT