சென்னை: மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) எழுதத் தகுதியான மாணவர்களின் ஹால்டிக்கெட்களை, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் பயிலவும், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் `நீட்' தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
அதேபோல, ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அதன்படி, 2023-24 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 499 நகரங்களில் வரும் 7-ம் தேதி நேரடி முறையில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 6-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 15-ம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் 18 லட்சத்து 72,341 மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் பேர் நீட் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நீட் தேர்வெழுத விண்ணப்பித்தவர்களில் தகுதிபெற்ற தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்களை என்டிஏ நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது.
மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்களை http://neet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வின்போது பின்பற்ற வேண்டிய ஆடைக் கட்டுப்பாடு உள்ளிட்ட விதிமுறைகளும் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தொடர்பான கூடுதல் தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.