சென்னை: குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவ.5-ம் தேதியுடன் (வியாழன்) முடிவடைகிறது.
கிராம நிர்வாக அலுவலர், பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வருவாய் உதவியாளர், வரித்தணட்லர் உள்பட பல்வேறு பதவிகளில் 6574 காலியிடங்களை நிரப்புவதற்கானக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த அக்டோபர் 6-ம் தேதி அன்று வெளியிட்டது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவே அன்றைய தினத்தில் இருந்தே தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படை கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்ற போதிலும் பட்டதாரிகளும் முதுகலை பட்டதாரிகளும் பொறியியல் படித்தவர்களும் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி இதுவரை 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவ,.5-ம் தேதி முடிவடைகிறது.
எனவே, குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை (www.tnpsc.gov.in) நவம்பர் 5-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி நடைபெற உள்ளது.