விருதுநகர்: தமிழகத்தில் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) டாடா நிறுவனத்தோடு இணைந்து புதிதாக தொழில்நுட்பப் பயிற்சி வகுப்புகளை நடத்த ‘தொழில்நுட்ப மையம் 4.0’ அமைக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக பணிகள் முடிந்த 25 அரசு ஐடிஐகளில் தொழில்நுட்ப மையத்தை முதல்வர் ஸ்டாலின் விரைவில் திறந்துவைக்க உள்ளார்.
தமிழகத்தில் 91 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலை யங்கள் உள்ளன. இவற்றை மாறிவரும் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு மாற்றிட முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப மையங்களாக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.
அதன்படி, முதல்கட்டமாக 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் டாடா நிறுவனத்துடன் இணைந்து ‘தொழில்நுட்ப மையம் 4.0’ தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.2,877.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 87.5 சதவீதம் டாடா நிறுவனமும், 12.5 சதவீதம் தமிழக அரசும் நிதி பங்களிப்போடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.தேர்ந்தெடுக்கப்பட்ட 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தலா ரூ.3.73 கோடி மதிப்பில் 10,500 சதுர அடி பரப்பளவில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அலுவலகப் பொருட்கள், இயந்திரங்கள், பயிற்சிக்கான கருவிகள், தளவாடப் பொருள்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்காகவும், கட்டுமானப் பணிகளுக் காகவும் மொத்தம் ரூ.2,862.01 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 218 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் 39 ஒப்பந்தப் பணியிடங்களும் ஏற்படுத்தப்பட உள்ளன. இவர்களின் ஊதியத்துக்காக ரூ.15.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட 25 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் தொழிலாளர் துறை கூடுதல் முதன்மைச் செயலர் முகமது நஸ்முதீன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதைத்தொடர்ந்து, 25 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தை காணொலி மூலம் முதல்வர் விரைவில் திறந்துவைக்க உள்ளதாக அரசு தொழிற்பயிற்சி நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.