கல்வி

அரசு தன்னாட்சி கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசையில் சென்னை மாநிலக் கல்லூரி 3-வது இடம்

செய்திப்பிரிவு

சென்னை: அரசு தன்னாட்சிக் கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசையில், சென்னை மாநிலக் கல்லூரி 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

பெங்களூருவை தலைமையமாகக் கொண்ட 'எஜுகேஷன்வேல்டு' கல்வி இதழ், தேசிய அளவில் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசையை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

உட்கட்டமைப்பு வசதி, பேராசிரியர்கள் நலன், நிர்வாகம், ஆராய்ச்சிப் பணிகள், பாடத்திட்டம், கற்றல்-கற்பித்தலில் தகவல் தொழில்நுட்ப வசதி பயன்பாடு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், தனியார் கல்லூரி, அரசு தன்னாட்சி கல்லூரி, டாப் 100 சிறந்த கல்லூரிகள் என வெவ்வேறு பிரிவுகளில் தரவரிசை வெளியிடப்படுகிறது.

அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான தரவரிசையை எஜுகேஷன்வேல்டு வெளியிட்டுள்ளது. இதில், அரசு தன்னாட்சிக் கல்லூரிப் பிரிவில் கேரள மாநிலம் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரி 531 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், ஐதராபாத் பேகம்பேட் அரசு மகளிர் கல்லூரி 527 புள்ளிகள் பெற்று 2-ம் இடத்தையும், சென்னை மாநிலக் கல்லூரி 511 புள்ளிகள் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.

இதுகுறித்து மாநிலக் கல்லூரிமுதல்வர் ஆர்.ராமன் கூறியதாவது: தொடர் முயற்சியால் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்தோம். இந்த ஆண்டு 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். எங்கள் கல்லூரியில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. குறிப்பாக, கல்லூரி வளாகத்தில் 2,000 இருக்கைகளுடன் பிரம்மாண்ட ஆடிட்டோரியம் அமைக்க, அரசு ரூ.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அதேபோல, மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.23 கோடி செலவில் தனித்தனி விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், ரூ.75 லட்சம் செலவில் கேன்டீன் அமைக்கப்பட்டு வருகிறது. எஜுகேஷனல் வேல்டு தரவரிசையில் 2021-ம் ஆண்டு 14-வது இடத்தில் இருந்தோம். வரும் ஆண்டில் முதலாவது இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறோம்.

இவ்வாறு கல்லூரி முதல்வர்ஆர்.ராமன் கூறினார்.

SCROLL FOR NEXT