வேலூர்: விஐடி பல்கலைக்கழகம் தேசிய பங்குச்சந்தையுடன் இணைந்து புதிய பி.காம். படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.
வேலூர் விஐடி பல்கலைக்கழகம், தேசிய பங்குச் சந்தையுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி, நிதிச்சந்தை மற்றும் எதிர்கால திறன் தேவைக்கேற்ப தேசிய பங்குச்சந்தையுடன் இணைந்து விஐடியில் உள்ள வணிகவியல் துறையுடன் இரண்டு புதிய பி.காம் படிப்புகளான வங்கி மற்றும் மூலதன சந்தை (Banking and Capital Markets) மற்றும் நிதி தொழில்நுட்பம் (Financial Technology) ஆகிய பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வங்கி மற்றும் நிதித்துறை சம்பந்தமான தொழில் துறைக்கு தேவையான திறன்களை மேம்படுத்தும் விதத்தில் விஐடி பேராசிரியர்கள் மற்றும் தேசிய பங்குச்சந்தை அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் இந்த படிப்புக்கான பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.
புதிய பி.காம். படிப்புகளுக்கு தேவையான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய லேப் (Lab) தேசிய பங்குச்சந்தையின் என்.எஸ்.மார்ட் உடன் இணைந்து விஐடி உருவாக்கியுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், துணை வேந்தர் ராம்பாபு கோடாலி, இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, தேசிய பங்குச்சந்தை அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அபிலாஷ் மிஸ்ரா, தேசிய பங்குச்சந்தை நிர்வாகிகள் ரங்கநாதன், வினோத் ஜேம்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இரண்டு புதிய பி.காம். படிப்புகளால் வங்கி மற்றும் நிதி துறையில் சுமார் 1.8 மில்லியன் வேலை வாய்ப்புகள் பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.