தருமபுரி: மாணவர்களின் நலன், அறிவுத் திறன் மேம்பாடு, எதிர்காலம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் சற்றே கண்டிப்பையும் பின்பற்றிய காலத்தைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் சமூகத்தில் உயர்ந்த பண்புகளுடன் உருவாகினர். ஆனால், இன்றைய காலக்கட்ட மாணவர்களில் பலர், ஆசிரியர் களின் அறிவுரைகள், கண்டிப்பு ஆகியவற்றுக்கு வேறுவிதமான எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.
ஆசிரியர்களுடன் மோதல் போக்கு, மதுபோதையில் பள்ளிக்கு வந்து அலப்பறை செய்வது போன்ற செயல்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இந்த சூழலை சுட்டிக்காட்டியும், இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அருகிலுள்ள கன்னிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சீனிவாசன் விழிப்புணர்வு பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.
ஆசிரியர் சீனிவாசனின் மகன் நேஷ் தருமபுரி அவ்வை நகர் அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். இசைக் கருவிகளை கையாள்வதில் பயிற்சி பெற்ற இவர், தன் தந்தை எழுதிய பாடலுக்கு இசை அமைத்துக் கொடுத்தார். மகனது இசையமைப்பில் இந்தப் பாடலை ஆசிரியர் சீனிவாசனே பாடி வீடியோ பதிவு ஒன்று உருவாக்கப்பட்டது.
இதில் பின்னணியில் பாடல் ஒலிக்க, கடந்த காலங்களில் ஆசிரியர்-மாணவர் இடையில் நிகழ்ந்த மோதல் சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ‘ஏற்றி வைத்த ஏணிப்படியை, ஏன் இப்படி எட்டி உதைக்கிறாய்...’ என்று தொடங்கும் இந்த பாடலை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். பதிவிடப்பட்ட ஒருவாரத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.
தொடர்ந்து இப்பாடலுக்கு சிறந்த வரவேற்பும், வாழ்த்தும் கிடைத்து வருகிறது. அதேபோல, ஆசிரியரின் தொலைபேசி எண்ணை பெற்றும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறை சார்பிலும் பாடல் குறித்து விசாரித்து ஆசிரியரை உற்சாகப் படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, ஆசிரியர் சீனிவாசன் கூறும்போது, ‘ஆசிரியர்-மாணவர் இடையே வகுப்பறையிலும், பள்ளி வளாகத்திலும் நிலவும் நல்லுறவு மூலமே சமூகத்தில் சிறந்த இளைய தலைமுறையினரை உருவாக்க முடியும். அப்படியானவர்களால் நிரம்பிய சமூகம் தான் அமைதியான சமூகமாக அமையும். அந்த நிலையில் இருந்து விலகிச் செல்லும் மாணவ சமூகத்தை நல்வழி நோக்கி மடைமாற்றும் நோக்கத்துடனும், மனதில் இருந்த ஆதங்கங்களை பதிவு செய்யும் விதமாகவும் இப்பாடலை எழுதி பாடி பதிவேற்றியுள்ளோம்.
ஆங்காங்கே தடுமாற்றத்தில் நிற்கும் மாணவர்களை இப்பாடல் மீண்டும் நல்வழியை நோக்கி திருப்பினால் அதுவே இப்பாடலுக்கு கிடைத்த பெரிய பலனாக கருதுவோம்’ என்றார்.