காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: தமிழ்நாட்டில் நேற்று தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் முதல் நாளில் 1,563 பேர் தேர்வு எழுத வரவில்லை என, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், 5 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 5 கூடுதல் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 63 தேர்வு மையங்களுக்கு 63 முதன்மை கண்காணிப்பாளர்கள், 63 துறை அலுவலர்கள், 11 வழித் தட அலுவலர்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.
இந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட 16,524 பள்ளி மாணவர்கள், 308 தனித் தேர்வர்கள் என,16,832 பேரில், முதல் நாளான நேற்று 16,562 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். பல காரணங்களால் 270 பேர் தேர்வு எழுத வரவில்லை.
அதே போல், செங்கல்பட்டு மாவட்டத்தில் 126 மையங்களில் நேற்று தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 37,350 அனுமதிக்கப்பட்டனர். இதில், 36,768 பேர் மட்டுமே நேற்று தேர்வு எழுதினர். 582 பேர் தேர்வு எழுத வரவில்லை.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில், 188 மையங்களில் நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வை எழுத அனுமதிக்கப்பட்ட 49,455 பேரில், முதல் நாளான நேற்று 48,744 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். பல்வேறு காரணங்களால் 711 பேர் தேர்வு எழுதவில்லை என, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.