சென்னை: "தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்துவதற்கும் அவர்கள் உயர்கல்வியைத் தொய்வின்றித் தொடர்வதற்கும் உதவி செய்வதே, தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வுத் திட்டத்தின் நோக்கம்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை ஐஐடி வளாகத்தில், “அனைவருக்கும் IITM” திட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னணு சார்ந்த செய்முறைப் பயிற்சிகள் அளித்திடும் வகையில் அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறைப் பெட்டகங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்வில் முதல்வர் பேசியது: "கல்வி என்பது அனைவருக்கும் சமமாகக் கிடைத்தால், அடுத்தடுத்து அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் சமமாக பெற்றிட முடியும்.ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் திறன் வளர்ச்சிக்காகவும், பள்ளிகளில் தரமான கற்றல் சூழலை உருவாக்கக்கூடிய வகையிலும் பல்வேறு வகையிலான முன்னேடுப்புகளை நாம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.
அனைத்துக் குழந்தைகளும் படிப்பதற்கான சிறந்த இடமாக அரசுப் பள்ளிகள் இன்று மாறி வருகிறது. 'அனைவருக்கும் கல்வி - அனைவருக்கும் உயர்கல்வி' என்பதை இலக்காகக் கொண்டிருக்கிறது நம்முடைய அரசு. மாணவர்களுக்குத் தேவையான அறிவியல் அறிவினை வளர்த்துக் கொள்ள தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாகத்தான் இந்த விழாவும் அமைந்திருக்கிறது.
இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் முதன்மையான கல்வி நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது இந்த IIT, சென்னை. IIT சென்னையில் சேர்ந்து உயர்கல்வி பயில்வதே தம் வாழ்வின் லட்சியமாக நினைத்து, இலட்சக்கணக்கான மாணவர்கள் தங்களுடைய கற்றல் திறன்களை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.இத்தகைய சிறப்பு வாய்ந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனம், நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவக்கூடிய வகையிலும் அவர்களையெல்லாம் ஊக்கப்படுத்தக்கூடிய வகையிலும், அறிவியல் சிந்தனைகளை வளர்க்கக்கூடிய வகையிலும் நம் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து உருவாக்கியுள்ள திட்டமே “அனைவருக்கும் IITM”.அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நாட்டிலுள்ள முன்னணிக் கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில்வதற்குத் தயார்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாக அமைந்திருக்கிறது. எனது கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' என்ற திட்டத்தின் தொடர்ச்சியான முன்னெடுப்புதான் இது. நான் முதல்வன் திட்டத்தைப் போலவே இந்த திட்டமும் பயனுள்ளதாக அமையப் போகிறது.
அனைவருக்கும் IITM திட்டத்தின் முதற்கட்டமாக, IIT சென்னையில் நான்காண்டுப் படிப்பாக வழங்கப்படும் B.S. Data Science and Applications (தரவுப் பயன்பாட்டு அறிவியல்) பட்டப்படிப்பில் சேர தமிழ்நாட்டிலுள்ள 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 87 மாணவர்களில் 45 மாணவர்கள் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வானவில் மன்றம், காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் இயக்கம், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள், புதுமைப்பெண் திட்டம், மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட தொழிற் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை கல்வி வளர்ச்சிக்காக நாம் செய்து வருகிறோம். இவை அனைத்தும் சேர்ந்து கல்வித் துறையில் மாபெரும் அறிவுப் புரட்சிக்கு வித்திட்டிருக்கிறது.நமது அரசு கல்விக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் தருகிறது என்பதை நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கக்கூடிய, செயல்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய திட்டங்கள் மூலமாக நீங்கள் அறியலாம்.
இதுபோன்ற திட்டங்களின் தொடர்ச்சியாக, தற்போது “தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வுத் திட்டம்” என்ற மிக முக்கியமான புதிய திட்டத்திற்கான அறிவிப்பினை இந்த நிகழ்வில் வெளியிட்டு, அறிமுகம் செய்து, தொடங்கி வைப்பதில் நான் பெருத்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்துவதற்கும் அவர்கள் உயர்கல்வியைத் தொய்வின்றித் தொடர்வதற்கும் உதவி செய்வதே, இந்தத் திட்டத்தினுடைய நோக்கம்.
இந்த திட்டத்தின் வாயிலாக பத்தாம் வகுப்புப் பயிலும், 500 மாணவர், 500 மாணவியர் என 1000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் சென்னை ஐஐடி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு வழிகாட்டுதல் வழங்கப்படும். அவர்களுடைய பன்னிரண்டாம் வகுப்பினை நிறைவு செய்யக்கூடிய வகையில், ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களுடைய இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பை தொடரும் போதும் ஒவ்வொரு ஆண்டும் 12,000 ரூபாய் வீதம் உதவித் தொகையும் பெறுவர் என்பதை மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எதன் பொருட்டும் ஒருவரது வாய்ப்பு பறிபோகக் கூடாது என்று நான் தொடக்கத்திலே சொன்னேன். "அரசுப் பள்ளியில் படிக்கும் நமக்கு, தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இணையான தனிப்பயிற்சிகள் கிடைக்கவில்லையே!?" என்ற ஏக்கம் யாருக்கும் இருக்கக் கூடாது. அதற்காகத் தான் இந்தத் திட்டம்.
சமூக அமைப்போ, பொருளாதார நிலைமையோ, அவர்களது வளர்ச்சியைத் தடுக்கக் கூடாது. பெண் என்பதற்காக பள்ளிப் படிப்போடு அவர்களது கல்வி நிலை சுருக்கப்படக் கூடாது.
இத்தகைய சமூக அநீதிகளைக் களைவது தான் சமூகநீதி.இடஒதுக்கீடாக இருந்தாலும், கல்வி உதவித் தொகைகளாக இருந்தாலும் தரப்படுவதற்கு இதுதான் காரணம். இதுபோன்ற சமூகநலத்திட்டங்களின் காரணமாகத்தான் சமூகமும் வளர்ந்துள்ளது. நாடும் வளர்ந்துள்ளது.
சமூகத்தின் அனைத்துத் தரப்பின் அறிவு சக்தியும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதற்கு கல்வி, அறிவியல்பூர்வ கல்வி, பகுத்தறிவுக் கல்வி வேண்டும். கல்வி என்பது, வேலைக்குத் தகுதிப்படுத்துவதாக மட்டும் இருக்கக்கூடாது. மாணவர்களைத் தன்னம்பிக்கை உள்ள மனிதர்களாகத் தகுதிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் அறிவாற்றலை மட்டுமல்ல, மன ஆற்றலையும் உருவாக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். மாணவர் திறனறித் தேர்வுத் திட்டத்தை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று அவர் பேசினார்.