மதுரை: அரசுப் பள்ளி மாணவர்கள் தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் தொடக்க விழாவின்போதே களப்பயணமாக சென்ற மாணவர்கள், கள்ளிக்குடி கோயிலில் உள்ள பாண்டியர் கால கல்வெட்டுகளில் குறிப்பிட்டிருந்த பாசன ஏரிகளின் பெயர்களைப் படித்து வியந்தனர்.
தமிழக அரசு, பள்ளி மாணவர்களிடையே தொல்லியல் சார்ந்த கருத்துகளை உருவாக்கவும், அதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தொல்பொருட்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து கற்றுத்தர பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றம் ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதற்காக பள்ளிகள் தோறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி அளித்து வருகிறது. அதனையொட்டி மதுரை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொல்லியல் துறை சார்பில் கடந்த 6ம் தேதி முதற்கட்டமாக கீழடியில் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அந்தந்தப் பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றத்தை தொடங்க ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் முதலாவதாக மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம், லாலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தொடங்கப்பட்டது. முதல் நாளிலேயே துவக்க விழாவும், கல்வெட்டுகளைப் படிக்கும் பயிற்சியும் நடைபெற்றது. இவ்விழாவுக்கு அப்பள்ளி தலைமையாசிரியை முத்துலட்சுமி தலைமை வகித்தார். ஏழாம் வகுப்பு மாணவி ரதி வரவேற்றார். தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலாளரும், தமிழாசிரியருமான ராஜேஸ்வரி, தொன்மைப் பாதுகாப்பு மன்றத் தொடக்கவிழாவில் அறிமுக உரையில் பேசினார்.
அப்போது அவர் பேசியது: ''தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதல் கட்ட தொல்லியல் பயிற்சி இம்மாதம் (மார்ச் 6) மதுரையில் நடந்தது. இப்பயிற்சியை பெற்ற ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தொல்லியல் சார்ந்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்பது அரசின் விருப்பம். அதன்படி தமிழ்நாட்டின் கலை, பண்பாடு, வரலாறு, தொல்லியலை பள்ளி மாணவர்கள் அறிந்துகொள்ளவும், பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தவும் பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தொடங்கப்பட்டது, என்றார். விழா முடிவில், ஏழாம் வகுப்பு மாணவன் முகமது ஹாரூன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மாணவர்கள் அபி, காவியா, சந்தோஷ்குமார், முகமது ஹஸ்ரத் ஆகியோர் செய்தனர்.
பின்னர் களப்பயணமாக மன்ற நிகழ்வின் ஒரு பகுதியாகப் பள்ளி மாணவர்களை கள்ளிக்குடி குலசேகரப்பெருமாள் கோயிலுக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள கல்வெட்டுகளை படியெடுத்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதில், கி.பி.13-ம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்ட கள்ளிக்குடி குலசேகரப்பெருமாள் கோயில் எனவும், இக்கல்வெட்டுகளில் இவ்வூரில் இருந்த பெரியகுளமான விக்கிரமபாண்டிய பேரேரி, குமரநாராயணப் பேரேரி, ராசசிங்க பேரேரி, கோவிந்தப்பேரேரி ஆகிய பாசனத்திற்கு பெரிய பெரிய ஏரிகளின் பெயர்களைப் படித்து மாணவர்கள் வியந்தனர். இதன் மூலம் பழங்கால தமிழர்களின் நீர்ப்பாசன கட்டமைப்புகள் தெரியவந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.