மாணவி ஜெயவர்தனி. 
கல்வி

கம்போடியா, தாய்லாந்து சர்வதேச யோகா போட்டிகளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி தேர்வு

அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் இந்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச யோகா போட்டிகளில் இந்திய அணி சார்பில் கலந்து கொள்வதற்கு ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாணவி ஜெயவர்தனி (12) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் குடியரசு (43). இவரது மனைவி கீதா (34). இவர்களது மகள்கள் கவியரசி (16) 10-ம் வகுப்பும், ஜெயவர்தனி (12), 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். குடியரசு ஸ்ரீவில்லிபுத்தூர் மர வியாபாரம் செய்து வருகிறார். குடியரசு கடந்த 10 ஆண்டுகளாக தினசரி யோகா பயிற்சிக்கு சென்று வருகிறார். இவர் கரோனா ஊரடங்கு காலத்தில் மனைவி மற்றும் குழந்தைகளையும் தன்னுடன் யோகா பயிற்சிக்கு அழைத்து சென்றார்.

இவரது மகள் ஜெயவர்தனி கடந்த 8 மாதங்களில் பள்ளி, மாவட்ட, மாநில அளவிலான சுமார் 30-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதில் மாவட்ட அளவில் 3 போட்டிகள், மாநில அளவில் 3 போட்டிகள், தென் இந்திய அளவில் 3 போட்டிகளில் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 7-வது தேசிய யோகா போட்டியில் 12 வயது பிரிவில் மாணவி ஜெயவர்தனி கலந்து கொண்டு முதலிடம் பெற்றார். இதன் மூலம் ரூ.20 ஆயிரம் நிதியுதவியில் யோகா பயிற்றுநர் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

தென்காசி மாவட்டம் சிவசைலம் பகுதியில் குட்லைப் ஆசிரமம் மற்றும் யோகா கலாசார மையம் சார்பில் ஜனவரி மாதம் நடைபெற்ற தேசிய யோகா சாம்பியன்ஷிப்-2023 போட்டியில் மாணவி ஜெயவர்தனி 12-13 வயது மற்றும் ஒட்டுமொத்த பிரிவில் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் தாய்லாந்து நாட்டில் வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெறும் சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பழனியில் மார்ச் 11-ம் தேதி நடந்த தேசிய யோகா போட்டியில் மாணவி ஜெயவர்தனி கலந்து கொண்டு 12 வயது மற்றும் ஒட்டுமொத்த பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். இதையடுத்து கம்போடியா நாட்டில் மே 27-ம் தேதி நடைபெறும் சர்வதேச அளவிலான யோகா போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க மாணவி ஜெயவர்தனி தேர்வாகி உள்ளார்.

கரோனா ஊரடங்கு காலத்தில் யோகா பயிற்சி பெற்று 8 மாதங்களில் 3 தேசிய அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று, வெளிநாடுகளில் நடைபெற உள்ள இரு சர்வதேச போட்டிகளுக்கு மாணவி ஜெயவர்தனி தேர்வு செய்யப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

SCROLL FOR NEXT