விருதுநகர்: மிகப்பெரும் தேசியத் தலைவர்கள் அமர்ந்த நாடாளுமன்ற அவையில் அமர்ந்து கலந்துரையாடியது, வாழ்வில் மறக்க முடியாத தருணம் என டெல்லியில் நடைபெற்ற தேசிய இளைஞர் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற விருதுநகர் மாணவி வைஷாலி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் எலெக்ட்ரீஷியன் கொண்டு சாமி - சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் லதா ஆகியோரின் மகள் வைஷாலி (21). இவர் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பிஎஸ்சி படித்த பின், தற்போது விருதுநகரில் உள்ள செந்திக்குமார நாடார் கல்லூரியில் எம்எஸ்சி இயற்பியல் படித்து வருகிறார். பேச்சுப் போட்டியில் ஆர்வம் கொண்ட இவர், நேரு யுவகேந்திரா மூலம் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் பங்கேற்று "இளைஞர்களுக்கான குறிக்கோள்" என்ற தலைப்பில் பேசி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.
பின்னர், பிப்ரவரியில் மாநில அளவிலான நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பங்கற்று "பருவநிலை மாற்றம்" என்ற தலைப்பில் பேசி மாநில அளவில் 80 பேர் பங்கேற்ற இப்போட்டியில் 2-ம் இடம் பெற்றார். கள்ளக்குறிச்சி மாணவி சுப்ரியா முதலிடம் பெற்றார். 3-ம் இடத்தை காஞ்சிபுரம் மாணவி ஞானசவுந்தரி பெற்றார். இவர்கள் மூவரும் கடந்த 1,2-ம் தேதிகளில் டெல்லியில் நாடாளுமன்ற மைய அவையில் நடைபெற்ற தேசிய இளையோர் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த அனுபவம் குறித்து மாணவி வைஷாலி கூறுகையில், “நாடாளுமன்றக் கட்டிடத்தை நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும்தான் பார்த்துள்ளேன். முதல் முறையாக நேரில் சென்று அதுவும், நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் மைய அவைக்குள் சென்றபோது உடல் புல்லரித்தது. அந்த உணர்வை சொல்ல வார்த்தைகள் இல்லை.
மாபெரும் தேசியத் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் அமைந்த இடத்தில் அமர்ந்து, மிகப்பெரிய சட்டங்களை வகுத்த அவையில் இருந்த தருணங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதவை. அதோடு, அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடியதும், புதிய அனுபவமாக இருந்தது. அதோடு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும், நூலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் சென்று பார்வையிட்டு வந்தது பிரமிப்பாக இருந்தது” என மாணவி கூறினார்.