கல்வி

அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - கல்வியியல் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகம் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: அதிக கட்டணம் வசூலிக்கும் கல்வியியல் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பி.சி.நாக சுப்பிரமணி, அனைத்து கல்வியியல் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் பி.எட்., எம்.எட்., பிஎஸ்சி-பிஎட்,பிஏ.-பிஎட். பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் சார்பில், முதல்வரின் இணையதள முகவரிக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அவற்றில், மத்திய, மாநில அரசுகளின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் கல்வி உதவித் தொகையைசில கல்வியியல் கல்லூரிகள் முழுவதுமாக பெற்றுக் கொள்வதுடன், மாணவர்களிடம் இருந்துஅதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அவ்வாறு வசூலிக்கும் பணத்துக்கு கல்லூரி நிர்வாகங்கள் முறையான ரசீதுகளை வழங்க மறுக்கின்றன என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கும் புகார்கள் வந்துள்ளன. பல்கலைக்கழக இணைப்பு பெற்ற கல்வியியல் கல்லூரிகள், இதுபோன்ற புகார்கள் எழாதவாறு நடந்து கொள்ள வேண்டும். மேலும், புகாருக்கு உள்ளாகும் கல்லூரிகள் மீது அரசு மற்றும் பல்கலைக்கழக விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT