சென்னை: சிற்பி திட்ட மாணவர்கள் உருவாக்கிய 5 லட்சம் விதைப்பந்துகளை அமைச்சர் மெய்யநாதனிடம், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார். இது உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.
சிற்பி திட்டத்தில் இடம் பெற்றுள்ள 5 ஆயிரம் மாணவர்கள் உருவாக்கிய 5 லட்சம் விதைப்பந்துகளை, சுற்றுச்சூழல் துறையிடம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராணி மேரி கல்லூரியில் நேற்று நடைபெற்றது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமை வகித்தார்.
காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சுற்றுச்சூழல் துறைச் செயலர் சுப்ரியா சாஹு, பசுமை தமிழ்நாடு திட்ட இயக்குநர் தீபக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் உருவாக்கிய 5 லட்சம் விதைப் பந்துகளை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அமைச்சர் மெய்ய நாதனிடம் வழங்கினார். தொடர்ந்து,சிற்பி திட்ட மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் மரக்கன்றுகளை வழங்கினார்.
இதில் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: உலகின் வெப்ப நிலை சராசரியை விட உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 2.82 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த ஆண்டு10 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயித்து, அதை நோக்கிப் பயணித்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில், சிற்பி திட்ட மாணவ, மாணவிகள் தங்களின் பங்களிப்பாக 5 லட்சம் விதைப் பந்துகளை வழங்கியுள்ளனர்.
அவர்களுக்குப் பாராட்டுகள். எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்றார். மாணவர்கள் உருவாக்கிய இந்தவிதைப் பந்துகள், உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.