சென்னை: பிளஸ்-2 பொதுத்தேர்வு வரும்13-ம் தேதி தொடங்கும் சூழலில், முறைகேடுகளைத் தவிர்க்ககடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 13-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளன. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுதினம் தொடங்குகிறது. முதல் நாள் மொழிப் பாடத் தேர்வுகள் நடைபெறுகின்றன. தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3,225 மையங்களில், 8.75 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். இவர்களில் 23,747 தனித்தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 90 சிறை கைதிகள் அடங்குவர். சென்னையில் மட்டும் 180 மையங்களில் 45,982 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இதேபோல, பிளஸ் 1 பொதுத்தேர்வு வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளது. மொத்தம் 3,224 மையங்களில், 7.93 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் 5,338 தனித்தேர்வர்கள், 5,835 மாற்றுத் திறனாளிகள், 4 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 125 சிறை கைதிகள் அடங்குவர். சென்னையில் மட்டும் 180 மையங்களில் 42,122 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
பொதுத்தேர்வுக்கான அறைக் கண்காணிப்பாளர் பணிகளைப் பொறுத்தவரை, பிளஸ் 2 தேர்வுக்கு 46,870 ஆசிரியர்களும், பிளஸ் 1 தேர்வுக்கு 43,200 ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், முறைகேடுகளைத் தடுக்க 4,235 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், கண்காணிப்பு ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்களை கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் உள்ள விதிகளை மாணவர்கள் நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிறப் பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனா கொண்டு எழுதக்கூடாது. இதுதவிர, விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தேர்வு எண், பெயர் ஆகியவற்றைக் குறிப்பிடக்கூடாது.
மாணவர் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும். அறைக் கண்காணிப்பாளரே விடைத்தாள்களைப் பிரித்து வைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க வசதியாக, தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்த அறை செயல்படும். 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, உரிய விளக்கம் பெறலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.