எட்டயபுரம் அருகே ராமனூத்து ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் நடந்த மகளிர் தினவிழாவில், மாணவி ராக்சிதா தலைமை ஆசிரியையாக தேர்வு செய்யப்பட்டார். 
கல்வி

கோவில்பட்டி | எட்டயபுரம் அருகே பள்ளியில் ஒருநாள் தலைமை ஆசிரியரான மாணவி

செய்திப்பிரிவு

கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே ராமனூத்து ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் பெண்கள் தினத்தையொட்டி 5-ம் வகுப்பு மாணவி தலைமை ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டார்.

எட்டயபுரம் அருகே ராமனூத்து ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் தேசிய பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பேரிலோவன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சித்ரா தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவி வீரம்மாள் முன்னிலை வகித்தார். பெண்ணியம் என்ற தலைப்பில் ஆசிரியை இந்திரா பேசினார்.

விழாவில் பள்ளியின் தலைமையாசிரியையாக 5-ம் வகுப்பு மாணவி ராக்சிதா தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டார். அவருக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி வரவேற்று அழைத்து வந்து தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்தனர்.

தொடர்ந்து, பாரதி கண்ட புதுமைப் பெண்கள் என்ற தலைப்பில் மாணவிகளுக்கு பேச்சுப்போட்டியும், பெற்றோர்களுக்கு இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மலையரசி, புதிய பாரத எழுத்தறிவு இயக்க தன்னார்வலர் நாகரத்தினம் மற்றும் கிராமமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியர் மு.க.இப்ராஹிம் செய்திருந்தார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் ஜே.சி.ஐ. மகளிர் அணி சார்பில் “தங்கமங்கை” என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஜே.சி.ஐ. கோவில்பட்டி தலைவர் தீபன்ராஜ் தலைமை வகித்தார். வழக்கறிஞர் ஜெயஸ்ரீ, ஜே.சி.ஐ. மண்டல அலுவலர் சுப்புலட்சுமி ஆகியோர் பேசினர்.

பெண்களுக்கு 6 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. தங்கமங்கை பட்டத்தை மரியா ஜோஷ்பின் மெர்சி வென்றார். அவருக்கு ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள பரிசு வழங்கப்பட்டது.

கோவில்பட்டி நகராட்சியில் நகர்மன்ற் தலைவர் கா.கருணாநிதி தலைமையில், ஆணையாளர் ஓ.ராஜாராம் முன்னிலையில் கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

SCROLL FOR NEXT