கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து நேற்று 2-வது நாளாக பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.
எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 56 மாணவ, மாணவிகள் படி்ணகின்றனர்.
தலைமை ஆசிரியர் உட்பட 5 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்த பள்ளியில் செந்தில்குமரன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கோவில்பட்டி அருகே கிழவிப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதை கண்டித்து நேற்று முன்தினம் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அங்குள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பெற்றோர் மட்டும் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்துக்கு சென்றனர்.
அவர்களிடம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சின்னராசு பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக 2 நாட்களுக்குள் முடிவெடுக்கப்படும். அதுவரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
ஆனால், தலைமை ஆசிரியரின் பணியிட மாறுதலை ரத்து செய்யும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என உறுதியாக தெரிவித்துவிட்டு பெற்றோர் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று 2-வது நாளாக தங்களது குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை. 4-ம் வகுப்பு மாணவிகள் 3 பேர், 2-ம் வகுப்பு மாணவி ஒருவர் என 4 பேர் மட்டும் பள்ளிக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தினர்.
இதுகுறித்து பெற்றோர் கூறும்போது, ‘‘தலைமை ஆசிரியர் செந்தில்குமரனின் பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்தால் மட்டுமே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம். இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்’’ என்றனர்.