தளவாய்புரத்தில் வகுப்பறை சீரமைக்கப்படாததால் வராண்டாவில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள். 
கல்வி

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் அரசு தொடக்கப் பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா?

செய்திப்பிரிவு

ராஜபாளையம்: பாளையம் அருகே தளவாய்புரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என துமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபாளையம் அருகே தளவாய்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 50 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. ஓடு வேயப்பட்ட வகுப்பறையில் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வந்தது.

பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் ஓடுகள் சேதமடைந்து மழைக் காலத்தில் மேற்கூரை ஒழுகும் சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து “இந்து தமிழ் திசை” உங்கள் குரல் சேவையில் தொடர்புகொண்டு தளவாய் புரத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவர் தெரிவித்ததாவது: ‘தளவாய்புரம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சுவர் மற்றும் மேற்கூரை சேதமடைந்தது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்பின்பு சேதமடைந்த ஓடுகள் மட்டும் சீரமைக்கப்பட்டன. இந்நிலையில் வகுப்பறையை சீரமைப்பதற்காக ரூ.6.78 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, பழைய ஓடுகள் அகற்றப்பட்டன.

ஆனால், ஓடுகள் அகற்றப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், சீரமைப்பு பணிகள் இன்னும் தொடங்கப்படாததால் இடவசதி இன்றி மாணவர்கள் வராண்டாவில் அமர்ந்து சிரமப்படுகின்றனர். இதனால் மாணவர்கள் நலன் கருதி வகுப்பறை சீரமைப்பு பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தார்.

குறித்து கல்வித்துறை அதிகாரியிடம் கேட்டபோது, ‘தொடக்கப் பள்ளி வகுப்பறை சீரமைப்புக்காக ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து ரூ.6.78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள்தொடங்கிஉள்ளன. விரைவில் சீரமைப்பு பணிகள் நிறைவு செய்யப்படும்’, என்றார்.

SCROLL FOR NEXT