சென்னை: அரசு மாதிரிப் பள்ளி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வுநடத்தப்படுவதாக வெளியான தகவல் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மாதிரிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக அடிப்படை மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் ஒரு மாவட்டத்துக்கு தலா 120 மாணவிகள், 120 மாணவர்கள் என 240 பேர் மாதிரிப் பள்ளிக்குத் தேர்வு செய்யப்படுவர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது நுழைவுத் தேர்வு போன்ற திட்டமாக இருப்பதாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அடிப்படை மதிப்பீடு: இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் திறமையானவர்களை ஊக்குவித்து, அவர்கள் விரும்பும் உயர்கல்வி நிறுவனங்களை சென்றடையும் வரை தொடர் வழிகாட்டுதல்கள் வழங்குவதற்காக மாணவர்களுக்கு அடிப்படை மதிப்பீடு (பேஸ்லைன் சர்வே) நடத்த திட்டமிடப்பட்டது.
தவறான புரிதல்: இந்தச் செய்தி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்த இருப்பதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை தமிழக அரசு ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. அந்த நிலைப்பாட்டில் எந்தமாற்றமும் இல்லை.
தமிழகத்தில் உள்ளமாதிரிப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களும் அவர்தம் விருப்பத்துக்கும் திறமைக்கும் ஏற்ப உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்பை பள்ளிக் கல்வித்துறை தொடர்ந்து வழங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.