கல்வி

‘எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்’ பட்டப்படிப்பு - ஆன்லைனில் சென்னை ஐஐடி வழங்குகிறது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் ஏற்கெனவே பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன் என்ற 4 ஆண்டுகால பட்டப் படிப்பை ஆன்லைனில் வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது பிஎஸ்சி எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் என்ற 4 ஆண்டுகால ஆன்லைன் பட்டப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் தொடக்கவிழா சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் நேற்று நடந்தது.

ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி, ஐஐடி ஆட்சிக்குழு தலைவர் பவன் கே.கோயங்கா, பேராசிரியர் பேபி ஜார்ஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற இவ்விழாவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் இருந்தவாறு காணொலி வாயிலாக புதிய படிப்பை தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் கூறும்போது, “தற்போது அனைத்து துறைகளும் டிஜிட்டல்மயமாகி வரும் சூழலில் இந்த புதிய ஆன்லைன் பட்டப் படிப்பு, கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மத்தியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சென்னை ஐஐடி ஏற்கெனவே ஆன்லைனில் பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன் படிப்பை நடத்தி வருவது பாராட்டுக்குரியது. ஆன்லைன் படிப்புகள் மூலம் அனைவருக்கும் உயர்தர கல்வி கிடைக்கும் நிலை ஏற்படும்” என்று குறிப்பிட்டார்.

ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி கூறும்போது, “இன்றைய உலக சூழலில் எலெக்ட்ரானிக்ஸ் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. செல்போன்கள் உற்பத்தி பெருகி வருகிறது. மின் வாகனங்கள் தயாரிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் எம்பெடெட் உற்பத்தி துறையில் நிபுணர்களின் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த புதிய ஆன்லைன் படிப்பு இத்துறையில் ஏற்படும் தேவையை எதிர்கொள்ள பெரிதும் உதவும்” என்றார்.

இப்புதிய படிப்பு குறித்து பேராசிரியர் பேபி ஜார்ஜ் கூறும்போது, “பிளஸ் 2-வில் இயற்பியல், கணிதம் படித்தவர்கள், இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்கள், பணியில் இருப்போரும் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த படிப்பில் சேரலாம். இதற்கான வகுப்புகள் ஆன்லைனில் நடைபெறும். ஆய்வக வகுப்புக்கு மட்டும் ஐஐடிக்கு நேரில் வரவேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://study.iitm.ac.in/es/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்” என்றார்.

SCROLL FOR NEXT