சென்னை: சென்னை விஐடியில் 3 நாட்களாக நடந்த வைப்ரன்ஸ் விழாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மேலும், விஐடி சார்பில் சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
சென்னை விஐடியில் தேசிய அளவிலான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் ‘வைப்ரன்ஸ்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பு ஆண்டுக்கான ‘வைப்ரன்ஸ் - 2023’ கலை விழா பல்கலை. வளாகத்தில் கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
முதல் நாள் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஷிவம் துபே, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். அதன்பின் 2-வது நாளான நேற்று முன்தினம் பிரபல பாடகர் சோனு நிகமின் இசை கச்சேரி, புகழ்பெற்ற எம்.ஜே 5 குழுவின் நடனம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேறின.
நேற்று நடந்த நிறைவு விழாவில் நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா பங்கேற்று கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை வழங்கி பாராட்டினர். இந்நிகழ்வில் விஐடி துணைத் தலைவர் சேகர் விஸ்வநாதன், சென்னை விஐடி இணை துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புத்தக நன்கொடை: சிறைவாசிகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புத்தகங்களை விஐடி பல்கலைக்கழகம் நன்கொடையாக வழங்கியது. இதற்கான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் விஐடி துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன், உதவித் துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் 700 புத்தகங்களை சிறைத்துறை டிஐஜி முருகேசனிடம் வழங்கினர்.
விழாவில் உதவித் துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் பேசும்போது, “சிறைவாசிகள் கல்வி கற்பதற்கு தேவையான உதவிகளை செய்வதற்கு விஐடிதயாராக இருக்கிறது. அனைவருக்கும் புத்தக வாசிப்பு அவசியமானதாகும்’’என்றார். இந்நிகழ்வில் சென்னை விஐடியின் கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.