விருதுநகர்: விண்வெளிக்கு மனிதனை அனுப்ப தொடர் சோதனைகள் நடைபெற்று வருவதாக இஸ்ரோ ஆலோசகர் சிவன் தெரிவித்தார்.
விருதுநகரில் வி.வே.வன்னியப்பெருமாள் மகளிர் கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக இஸ்ரோ ஆலோசகர் சிவன் விருதுநகர் வந்தார். அதைத் தொடர்ந்து, காமராஜர் இல்லத்திற்குச் சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்களை பார்வையிட்டார். பின்னர் இஸ்ரோ ஆலோசகர் சிவன் அளித்த பேட்டியில், "இஸ்ரோ மூலம் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முக்கியமாக, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் கிரகன்யான் திட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முன் பாதுகாப்பு குறித்து பல்வேறு வகையான சோதனைகள் செய்யப்பட வேண்டும். அதுபோன்ற சோதனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோன்று சந்திராயன்-3 விண்ணில் ஏவுவதற்காக தயாராக உள்ளது. சூரியனைப் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான விண்கலமும் தயாராகிக் கொண்டிருக்கிறது.
மற்ற நாடுகளுக்கு சவால்விடும் வகையில் நாம் ராக்கெட்டுகளை அனுப்புவதைவிட நம் நாட்டின் தேவைகள் அதிகமாக உள்ளது. அதற்காக பல்வேறு ராக்கெட்கள் அனுப்பட்டு வருகின்றன. நமது வின்வெளி திட்டங்களைப் பொறுத்தவரை மற்ற நாடுகளை எதிர்த்து செயல்படுவது இல்லை. நமது தேவைகளை பூர்த்தி செய்வதே முக்கியமான பணியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு, மற்ற நாடுகளைவிட செலவு குறைவாக உள்ளதால் நம் நாட்டிலிருந்து ராக்கெட் அனுப்புகின்றன.
மற்ற நாடுகள் நமது வளர்ச்சியை பார்த்துக்கொண்டு நமது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களது ராக்கெட்டுகளை செலுத்த விரும்புகின்றன. மற்ற நாடுகளுக்கு சவால் விடுவது நமது திட்டம் கிடையாது. டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு செயற்கைக்கோளின் உதவி அதிகம் தேவைப்படுகிறது. இதனால் இஸ்ரோவின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. வெளிநாட்டின் ராக்கெட்டுகளை ஏவும் போது அதற்காக கட்டணம் பெறுகிறோம். இதன்மூலம் நாட்டின் அந்நியச் செலாவணியும் உயர்கிறது" என்றார்.