கல்வி

கோவை ஜி.டி.நாயுடு வளாகத்தில் 28-ம் தேதி ‘எக்ஸ்பிரிமெண்டா’ அறிவியல் மையம் தொடக்கம்

செய்திப்பிரிவு

கோவை: கோவை ஜி.டி.நாயுடு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜி.டி.கோபால், அறங்காவலர் அகிலா சண்முகம், பொது மேலாளர் சுரேஷ் நாயுடு ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

ஜி.டி.நாயுடு அறக்கட்டளை தற்போது 'எக்ஸ்பிரிமெண்டா” என்ற புதிய கலந்தாய்வு அறிவியல் மையத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் மற்றும் பெரியோர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தி பயிற்சியாகவும், பொழுது போக்காகவும் எளிமையாக கற்றுக்கொள்ள வைப்பதே இம்மையத்தின் நோக்கம்.

‘எக்ஸ்பிரிமெண்டா’ அறிவியல் மையத்தை, வரும் 28-ம் தேதி தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைக்கிறார். விழாவில், கவுரவ விருந்தினராக சென்னை, ஜெர்மன் தூதரக அதிகாரி மைக்கேலா குச்லேர் பங்கேற்கிறார். மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை பாரதீய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

‘எக்ஸ்பிரிமெண்டா’ அறிவியல் மையத்தில் 120-க்கும்மேற்பட்ட கலந்தாய்வு அறிவியல் பரிசோதனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அறிவியல் தொழில்நுட்பத்தை மாணவர்கள் எளிதாக அணுகி கற்கும் விதமாக வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. வேகம், ஒலி, ஒலி மாயபிம்பம், ஆடிகள், கணிதம், இயற்கை, இயந்திரவியல், ஆற்றலும் - சக்தியும், ஒளியும் - வண்ணங்களும் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அறிவியல் மையத்தில் ஸ்டெம் எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணித பாடங்களுக்கான செயல்முறை ஆய்வகம், இயற்பியல், ரோபோடிக் மற்றும் உருவாக்குபவர்களுக்கான தனி இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மையம், வரும் மார்ச் 1-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது.

காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை பார்வையிடலாம். கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT