புதுச்சேரி: மத்திய அரசின் மத்திய எரிசக்தி மையம் ஆண்டுதோறும், ‘தேசிய அளவில் மின் சக்தி சேமிப்பு’ என்ற தலைப்பில் ஓவியப் போட்டியை நடத்தி வருகிறது.
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்குபெறும் இப்போட்டியில் புதுச்சேரி மாநில அளவில் கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 8 ஆண்டுகளாக தேர்வாகி பல்வேறு பரிசுகளை வென்று அசத்தி வருகின்றனர்.
இது குறித்து அப்பள்ளி ஆசிரியர் செந்தில் கூறியதாவது: இப்போட்டி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும். இந்த ஓவியப் போட்டி முதலில் பள்ளிகளில் அளவில் நடத்தப்படும். பள்ளி அளவில் சிறந்த 2 ஓவியங்களைத் தேர்வு செய்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.
இணையத்தில் பதிவு செய்த சுமார் 500க்கும் மேற்பட்ட ஓவியங்களில் 100 சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்படும். 5,6,7-ம் வகுப்பு மாணவர்கள் ஏ பிரிவிலும், 8,9,10-ம் வகுப்பு மாணவர்கள் பி பிரிவிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு பிரிவிலும் 50 மாணவர்கள் வீதம் மொத்தம் 100 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்பார்கள்.
பள்ளி அளவில் அனுப்பப்படும் 2 சிறந்த ஓவியங்கள் மாநில அளவில் நடைபெறும் ஓவியப்போட்டிக்கு தகுதி பெறும் பட்சத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.2 ஆயிரம் ரொக்கமும், ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள பரிசுப் பொருட்களும் அளிக்கப்படும். இப்படியான இந்தப் போட்டியில் கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 8 ஆண்டுகள் தேர்வாகி பல்வேறு பரிசுகளை பெற்று வருகின்றனர்.
மேலும் மாணவர்களும் மின்சார சேமிப்பு குறித்தும் விழிப்புணர்வு அடைகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற மாநில அளவிலான ஓவியப் போட்டிக்கு எங்கள் பள்ளியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவர்கள் ரித்திகா, ரூபிகா ஆகிய இருவரும் தேர்வாகி உள்ளனர். பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் கடும் போட்டியில், தொடர்ந்து 8 ஆண்டுகளாக, மாநில அளவில் எங்கள் பள்ளி மாணவர்கள் தேர்வாகி வருவது மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்.