சென்னை: அனுமதியின்றி செயல்பட்டுவரும் ஸ்ரீ ராம் சமாஜ் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ சீதாராம் மேல்நிலைப் பள்ளியை அரசு ஏற்று நடத்த சம்பந்தபட்ட அதிகாரிகள் பரிசீலனை செய்து முடிவெடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ ராம் சமாஜ் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஸ்ரீ சீதாராம் மேல்நிலைப் பள்ளி கடந்த 1987-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 2,000 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிக்கு அரசு அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில், கடந்த 2012 ஆண்டு மே 31-ம் தேதியில் இருந்து பள்ளி அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.
பள்ளி இயங்கி வரும் மூன்று மாடி கட்டிடடம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது. மேலும், தீயணைப்பு துறை மற்றும் சென்னை மாநகராட்சியின் அனுமதி பெறாமல் இந்தக் கட்டிடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு தனியார் பள்ளிகள் கல்வி கட்டண குழு நிர்ணயத்த கட்டணத்தை விட கடந்த 2010ம் ஆண்டில் இருந்து 2013 கல்வி ஆண்டு வரை 1.68 கோடி ரூபாய் கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் விதிகளுக்கு முரணாக ஸ்ரீ ராம் சமாஜ் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஸ்ரீ சீதாராம் பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளி இயங்கி வரும் கட்டிடம் மிக மோசமான நிலையில் உள்ளது. பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்ட பள்ளியில் அடுத்த கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பள்ளி கட்டிடத்தின் நிலை மோசமான நிலையில் இருப்பதாக தெரிய வருகிறது, இதனால் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை இருப்பதால் இந்தப் பள்ளியை அரசு ஏற்று நடத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 14-ம் தேதியன்று ஒத்திவைத்தார்.