தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்துக்கு ரயில் மூலம் கல்விச் சுற்றுலா செல்லும் சிற்பி திட்ட மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்த தலைமை செயலாளர் வெ.இறையன்பு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர். 
கல்வி

சிற்பி திட்டத்தில் உள்ள மாணவர்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும்: இறையன்பு அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

பள்ளி மாணவர்கள், ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கவும், நாட்டுப்பற்றுடன் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும் தமிழக முதல்வரால் கடந்த ஆண்டு சிற்பி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை சேர்ந்த 2,558 மாணவர்கள், 2,442 மாணவிகள் என மொத்தம் 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு வாரந்தோறும் காவல் துறை சார்பில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவ, மாணவிகளுக்கு சென்னை காவல் துறைசார்பில் கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தவகையில், ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்துக்கு, இயற்கையுடன் இணைந்த கல்விச் சுற்றுலாவாக 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் ரயில் மூலம் நேற்று அழைத்துச் செய்யப்பட்டனர். கல்வி சுற்றுலாவை எழும்பூர் ரயில் நிலையத்தில் தலைமை செயலாளர்வெ.இறையன்பு கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உடனிருந்தார். இந்தப் பயணத்துக்காக 4 சிறப்புரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கல்விச் சுற்றுலா செல்லும் மாணவர்களுக்கு இறையன்பு, சங்கர் ஜிவால் ஆகியோர் இனிப்பு வழங்கி, வழியனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் இறையன்பு பேசியதாவது:

மாணவர்களிடம் காவல்துறையின் முன்னெடுப்புகளை எடுத்துச் செல்லவும், கல்வியைத் தாண்டி பொது செயல்களில் ஈடுபட வைத்து, படிப்படியாக மாணவர்களின் நடவடிக்கைகளை செதுக்கி, சிற்பமாக உருவாக்குவதுதான் இந்த சிற்பி திட்டத்தின் நோக்கம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சிகள் தொடங்கப்பட்டன.

தற்போது இந்த சிற்பிகள் எல்லாம் பெரிய பக்குவம் அடைந்திருக்கிறார்கள் என்பதற்கு, குடியரசு தின விழா அணிவகுப்பில், சிற்பி மாணவர்களின் அணிவகுப்பு சிறந்த அணிவகுப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வரிடம் பரிசுபெற்றதையே உதாரணமாக கூறலாம். இந்த முயற்சியானது படிப்படியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. சிற்பி திட்டத்தில் உள்ளமாணவர்கள், மற்ற மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்.

மாணவர்களிடம் பல்வேறுபண்புகளை வளர்ப்பதற்காகதான் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. காவல் துறை பயிற்சி மையத்துக்கு மாணவர்கள் அழைத்து செல்வதற்கான நோக்கம், மாணவர்கள் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். இந்த பயணம் வெற்றிபெற வேண்டும். இது ஒரு தொடக்கம்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், காவல்துறை மற்றும் ரயில்வே துறைஅதிகாரிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT