மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே மேலையூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட பூம்புகார் கலை, அறிவியல் கல்லூரியில் 1,300 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இங்கு குடிநீர், கழிப்பறை, வகுப்பறை இருக்கைகள், ஆய்வுக் கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சரியான முறையில் செய்து தர வலியுறுத்தியும், கல்லூரிக்கான தன்னாட்சி அதிகாரம் புதுப்பிக்கப்பட வில்லை என்றும், கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிப்.13, 14 ஆகிய தேதிகளில் வகுப்புகளைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கெனவே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தியதுடன், கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தனர். இதையடுத்து, பிப்.15 முதல் 3 நாட்களுக்கு அனைத்து வகுப்புகளும் ரத்து செய்யப்படுவதாக கல்லூரி முதல்வர் அறிவொளி நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். எனினும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த சீர்காழி கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் ஹரிப் பிரியா, இணை ஆணையர் மோகன சுந்தரம் ஆகியோர், மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, இன்று (பிப்.16) முதல் அனைத்து வகுப்புகளும் வழக்கம் போல நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.
இதையடுத்து, மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மாவட்ட எஸ்.பி என்.எஸ்.நிஷா மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் கல்லூரியில் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டு, பேராசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 15 நாட்களுக்குள் அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்லூரிக்கான தன்னாட்சி அதிகாரம் புதுப்பித்தல் குறித்து மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை. முதல்வர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும். இன்னும் 3 நாட்களில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், ஆணையர் ஆகியோர் கல்லூரிக்கு வந்து ஆய்வு செய்து, பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்கள் என ஆட்சியர் உறுதியளித்தார்.