கல்வி

திருச்சுழியில் ஸ்ரீரமண மகரிஷி படித்த அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்தது

செய்திப்பிரிவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் ஸ்ரீ ரமண மகரிஷி படித்த பெருமைக்குரிய அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

திருச்சுழியில் சிறப்புக்குரிய பூமிநாதர் கோயில் பின்புறம் சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்துக்குள் அரசு தொடக்கப் பள்ளியும் செயல்படுகிறது. இப்பள்ளிகளில் திருச்சுழி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

ஸ்ரீ ரமண மகரிஷி படித்த பெருமைக்குரியது இப்பள்ளி. இங்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இந்நிலையில், தொடக்கப் பள்ளி கட்டிடம் அருகே உள்ள சுற்றுச்சுவர் நேற்று முன்தினம் மாலை திடீரென இடிந்து விழுந்தது. மாணவர்கள் அனைவரும் பள்ளி முடிந்து புறப்பட்டுச் சென்ற பின்னர், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு சில வகுப்பறைக் கட்டிடங்களும் சேதமடைந்து காணப்படுகின்றன. சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவரை முழுமையாக இடித்து அகற்றிவிட்டு புதிய வகுப்பறைக் கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT